சிங்கப்பூரில் சபாநாயகர் பதவி விலகல்: என்ன காரணம் தெரியுமா?

சிங்கப்பூரில் சபாநாயகர் பதவி விலகல்: என்ன காரணம் தெரியுமா?
Editor 1

மிழர்கள் கணிசமான வசித்துவரும் சிங்கப்பூரில், திருமணம் தாண்டிய உறவு காரணமாக அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின் பதவிவிலகினார். அவருடன் உறவில் இருந்த தெம்பனீஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செங் கீ ஹூவியும் பதவிவிலகியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் முதல் நாளன்று நாடாளுமன்றம் கூடியபின், புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார். அதுவரை துணை சபாநாயகர் ஜெசிகா டான் இடைக்காலத்துக்கு சபாநாயகர் பொறுப்பை கவனிப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பதவிவிலகிய இருவரும் பல ஆண்டுகளாகவே திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகவும், இதுகுறித்து தான் அவர்களுக்கு சுட்டிக்காட்டி அறிவுறுத்தியதாகவும் பிரதமர் லீ சியான் லூங் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி டான், செங் இருவருக்கும் இடையிலான திருமணம் தாண்டிய உறவு தனக்கு தெரியவந்தது என்றும் தான் அறிவுரை வழங்கியபோது சிக்கலைச் சரிசெய்வதாக டான் கூறினார் என்றும் ஆனால் அடுத்தடுத்து இருவருக்கும் இடையிலான திருமணம் தாண்டிய உறவு தொடர்ந்தது என்பதற்கான தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன என்றும் பிரதமர் லீ நேற்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.

இதற்கிடையே, நாடாளுமன்றம் நடந்துகொண்டிருந்தபோது அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் டான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் கூறிய வார்த்தை மைக்கில் பதிவாகி, அவையில் நன்றாகக் கேட்டது. ஏப்ரல் 17ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வெளியாக, அதுவும் அரசுக்கு பிரச்னையாக ஆனது.

இந்த நிலையில், டானை பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். அதற்கு இணங்க அவர் தன் சபாநாயகர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு ஏற்கெனவே போக்குவரத்து அமைச்சர் ஈசுவரன் ஊழல் வழக்கில் கைதானதால், கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.இந்த நிலையில், சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினரும் இப்படியொரு பிரச்னையில் சிக்கியிருப்பது, மக்கள் செயல் கட்சியின் பெயரை மேலும் சரியவைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com