டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவாவுக்கு இரட்டை புற்றுநோயா? அதன் தீவிரம் என்ன?

மார்டினா நவரத்திலோவா
மார்டினா நவரத்திலோவா

டென்னிஸ் விளையாட்டில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் பிரபல வீராங்கனை மார்டினா நவரத்திலோவா. செக்கோஸ்லவோகியா நாட்டில் பிறந்தவரான இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 1978 மற்றும் 1990 -வருஷங்களுக்கு இடையில் ஒன்பது விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர்.

தற்போது 66 வயதாகும் மார்டினா நவரத்திலோவா, டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மார்டினா, தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது டென்னிஸ் உலகில் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதுகுறித்து மார்டினா கூறுகையில், "இரட்டை வலி தீவிரமானது. ஆனால், புற்றுநோயை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள். எனவே இதிலிருந்து மீண்டு வருவேன் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடருக்காக மெல்போர்ன் நகருக்குச் செல்லும் திட்டத்தை அவர் ரத்துச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாத இறுதியில் மார்ட்டினா, மருத்துவச் சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டென்னிஸ் சாம்பியன் நவரத்திலோவாவுக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதல் முறையல்ல, ஏற்கெனவே 2010 ஆண்டில் ஒரு முறை அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எனினும் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டதால் பாதிப்பு குறைந்தது.

கடந்த நவம்பர் மாதம் டெக்ஸாஸில் டபிள்யூ டி ஏ இறுதிப்போட்டியின் போது தொண்டையில் வீக்கம் இருப்பதை நவரத்திலோவா உணர்ந்தார். அந்த வீக்கம் விரைவில் குறைந்துவிடும் என எதிர்பார்த்தார். ஆனால், வீக்கம் குறையவில்லை. இதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்தபோது தொண்டையில் மட்டுமல்ல, மார்பக புற்றுநோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

“இப்போது தொண்டை புற்றுநோய், மார்பக புற்றுநோய் இரண்டையும் எதிர்த்து நான் போராட வேண்டியுள்ளது. எனினும் சிகிச்சை மூலம் விரைவில் குணமடைய முடியும் என எதிர்பார்க்கிறேன். புற்றுநோய் இருப்பது கொஞ்ச நாளைக்கு மன உறுத்தலை கொடுக்கும். ஆனால், எதிர்த்து போராடி நான் வெல்வேன்” என்று மார்டினா கூறியுள்ளார்.

மகளிர் டென்னிஸ் விளையாட்டில் ஒரு புதிய உடலியக்கத்தையும் செயல்பாடுகளையும் கொண்டுவந்தவர் மார்ட்டினா நவரத்திலோவா. பந்தை அடிப்பதிலும் அதை திருப்பி அனுப்புவதிலும் வல்லவரான அவர், ஒருகாலத்தில் டென்னிஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். முக்கியமான ஆட்டங்களில் 59, இரட்டையர் பிரிவில் 31, கலப்பு இரட்டையர் பிரிவில் ஏறக்குறைய 10 பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். தவிர 18 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 9 முறை பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்த சாதனையை எவரும் முறியடிக்கவில்லை. ரோஜர் பெடரர் 8 முறையும், செரீனா வில்லியம்ஸ் 7 முறையுமே இந்த பட்டத்தை வென்றுள்ளனர்.

டெயில் பீஸ்: மார்டினா ஒரு எல்.ஜி.பி.டி. ஆதரவாளர். 2014 ஆம் ஆண்டு தமது நீண்டநாள் தோழியான ஜூலியா லெமிகோவாவை திருமணம் செய்து கொண்டார். லெமிகோவாவுக்கு முன்னாள் கணவர்கள் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளன. நவரத்திலோவா, லெமிகோவா மற்றும் அவரின் இரு குழந்தைகளுடன் சேர்ந்து மியாமியில் வாழ்ந்து வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com