அமெரிக்க அதிபரின் உக்ரைன் விசிட்டுக்கு போட்டியாக சீனா அதிபர், ரஷ்யாவுக்கு பயணம்!

அமெரிக்க அதிபரின் உக்ரைன் விசிட்டுக்கு போட்டியாக சீனா அதிபர், ரஷ்யாவுக்கு பயணம்!

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருவதாகவும், ரஷ்யாவுக்கு சீனா உதவி வருவதாகவும் சென்ற ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் தொடர்ந்து அதை மறுத்து வந்தன. ஓராண்டில் அத்தனையும் உண்மை என்பதை உறுதிப்படுத்தும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

சென்ற மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபரின் பயணம், ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. வாஷிங்டனில் இருந்து போலந்துக்கு சென்ற அமெரிக்க அதிபர், அங்கிருந்து பத்து மணி நேரம் ரயில் மூலமாக பயணம் செய்து உக்ரைன் வந்திருந்தார்.

விமானத்தில் பயணம் செய்து, நேரடியாக உக்ரைன் சென்றால் ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் மாற்று ஏற்பாடாக ரயிலில் பயணம் செய்தார். ஒருவேளை ஜோ பைடன் பயணம் செய்யும் ரயில் மீது, ரஷ்ய ராணுவம் தாக்குதல் தொடுத்தால் அதை முறியடிக்க அமெரிக்க ராணுவப்படை அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.

உக்ரைனுக்கு வந்து சேர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரூ.4,135 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உறுதியளித்தார். இருவரும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். அப்போது ரஷ்யா குறித்து அமெரிக்க அதிபர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

ரஷ்யாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதால், ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி, பிற உலக நாடுகளுக்கு செல்கிறார்கள். ரஷ்யாவுடன் தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில்தான் ரஷ்யாவுக்கு உதவி செய்ய சீனா வெளிப்படையாக முன்வந்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா பயணமாகிறது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகவும் பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்ததை என்று குறிப்பிட்டாலும் ரஷ்யாவுக்கு கூடுதல் நிதியுதவி, ஆயுதங்கள் வழங்குவதற்காகத்தான் சீன அதிபர் பயணம் மேற்கொள்வதாக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் கண்ணோட்டமுள்ளது.

இது குறித்து சீனா தரப்பிலிருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ஹூவா சுன்யிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அழைப்பை ஏற்று அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா செல்ல இருக்கிறார். இது ரஷ்யாவின் முன்னெடுப்பே தவிர சீனாவின் முன்னெடுப்பு அல்ல என்பதை விளக்கியிருக்கிறார்.

ரஷ்யா சுற்றுப்பயணத்தின் போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பேசப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பேச்சுவார்த்தை ஒன்றுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். உக்ரைன் போர் விஷயத்தில் அமெரிக்கா போல் சீனாவால் வெளிப்படையாக இருக்க முடியவில்லை என்பது உண்மைததான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com