இம்ரான் கான் வசமாகச் சிக்க காரணமான "அல் காதிர் டிரஸ்ட்" வழக்கு விவரங்கள்!

இம்ரான் கான் வசமாகச் சிக்க காரணமான "அல் காதிர் டிரஸ்ட்" வழக்கு விவரங்கள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அல்-காதிர் அறக்கட்டளை வழக்கு தொடர்பாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைது செய்யப்பட்டார், அங்கு இன்று இரண்டு வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ள இம்ரான்கான் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து காவலில் வைத்தனர்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்ட செய்தியை அடுத்து, பாகிஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அமீர் பரூக், இஸ்லாமாபாத் காவல்துறைத் தலைவர், உள்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் கூடுதல் அட்டர்னி ஜெனரல் ஆகியோரை 15 நிமிடங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி, முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்குமாறு உத்தரவிட்டார்.

தற்போது பணியிலிருக்கும் மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் தன்னைக் கொலை செய்ய முயன்றதாக குற்றம் சுமத்தி இம்ரான்கான் வழக்குத் தொடுத்திருந்தார். அதிகாரி மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம் நிராகரித்த மறுநாளே இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை தான் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வரையிலும் கூட வீடியோ மூலம் வெளியிடப்ப்பட்ட செய்தியில் ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரி மீதான தனது குற்றச்சாட்டுகளை இரட்டிப்பாக்கியிருந்தார்.

இது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுவது என்னவென்றால், “இம்ரான் கான் இஸ்லமாபாத் நீதிமன்றத்தில் தனது ஜாமீனை புதுப்பிக்க வந்தார். அப்போது அவரது காரை சூழ்ந்த போலீஸார் அவரை கைது செய்தனர்” என்பதே.

இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் இதுவரையிலும் 100-க்கும் மேலான வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் 'அல் காதிர் ட்ரஸ்ட்' வழக்கில் அவர் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் கைது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசார் மாஷ்வானி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், இம்ரான் கானின் கைதை எதிர்த்து அவரது கட்சியான தெஹ்ரீக்-இ- இன்சாப் நாடு முழுவதும் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

அல்-காதிர் அறக்கட்டளை வழக்கு என்றால் என்ன?

இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவர்களது நெருங்கிய உதவியாளர்களான ஜுல்பிகார் புகாரி மற்றும் பாபர் அவான் ஆகியோர் ஒன்றாக இணைந்து அல்-காதிர் எனும் அறக்கட்டளையை உருவாக்கினர், இது பஞ்சாபின் ஜீலம் மாவட்டத்தின் சோஹாவா தாலுகாவில் 'தரமான கல்வியை' வழங்குவதற்காக அல்-காதிர் எனும் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம்.

ஆவணங்களில் அறக்கட்டளையின் அலுவலக முகவரி "பானி காலா ஹவுஸ், இஸ்லாமாபாத்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புஷ்ரா பீபி பின்னர் 2019 இல் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான பஹ்ரியா டவுனுடன் இணைந்து நன்கொடைகளைப் பெற ஒரு குறிப்பில் கையெழுத்திட்டார். அவர்களது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பஹ்ரியா டவுனில் இருந்து 458 கனல்கள், 4 மார்லாக்கள் மற்றும் 58 சதுர அடி அளவிலான நிலத்தை அல் காதிர் அறக்கட்டளை பெற்றது.

இருப்பினும், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லாவின் கூற்றுப்படி, இந்த 458 கானல் நிலத்தில், இம்ரான் கான் அதன் பங்குகளை நிர்ணயித்து, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் இருந்து 240 கானல்களை பிரித்து புஷ்ரா பீபியின் நெருங்கிய நண்பரான ஃபரா கோகியின் பெயரில் மாற்றினார்.

இந்த நிலப்பரிமாற்ற விவகாரத்தில் நிலத்தின் மதிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டு, பல்கலைக்கழகத்தின் பெயரில் இம்ரான் கான் தனது பங்கை முறைகேடாகப் பெற்றார், முன்னாள் பிரதமர் இந்த விஷயத்தை மறைக்க முயன்றார் என்று சனாவுல்லா கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், ரியல் எஸ்டேட் அதிபர் மாலிக் ரியாஸுக்கு இம்ரான் கான் கிட்டத்தட்ட 190 மில்லியன் பவுண்டுகள் கொடுத்ததாக ட்வீட் செய்துள்ளார், பின்னர் இந்தத் தொகையை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியிருந்தது.

மாலிக் ரியாஸ் ஒரு அறக்கட்டளைக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார், அதன் உறுப்பினர்கள் இம்ரான் கான், புஷ்ரா பீபி மற்றும் ஃபரா கோகி.

ஆனால் விமர்சகர்களின் கூற்றுப்படி, அறக்கட்டளை 2021 ஆம் ஆண்டில் அல்-காதிர் பல்கலைக்கழகம் என்ற பெயரில் கட்டுமானத்தின் கீழ் உள்ள நிறுவனத்திற்கு நன்கொடைகள் என்ற பெயரில் மில்லியன் கணக்கான தொகையைப் பெற்றது, இது மே 5, 2019 அன்று நிறுவனத்தின் தலைவரான இம்ரான்கானால் திறக்கப்பட்டது.

அல் காதிர் பல்கலைக்கழகம் தொடங்க சுமார் 8.52 மில்லியன் பாகிஸ்தானிய ரூபாய்கள் செலவாகியதாக பதிவேடுகளில் உள்ளது. ஆனால், அறக்கட்டளை

மூலமாக 180 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் கிடைத்ததாக பாகிஸ்தானின் ஊடகங்கள் சுட்டிக்காட்டியபோது இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அறக்கட்டளையாக ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன் என்று அவர்கள் மேலும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இது தான் இம்ரான் கானை சிக்க வைத்த அல் காதிர் அறக்கட்டளை வழக்கின் சாராம்சம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com