தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தனக்கு கிடைக்கும் ஆச்சரியமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை. இந்த முறை அவர் பகிர்ந்து கொண்ட தகவல் அதிக ஆச்சரியத்தை அளிக்கிறது. அதாவது, இசைக் கலைஞர் ஒருவர் கேரட்டை கிளாரினெட்டாக மாற்றி இனிமையான குரலில் இசைக்கிறார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இசைக்கலைஞர் லின்ஸி போலக். இவர் காய்கறிகளில் ஒன்றான கேரட்டில் துளை போட்டு அதை இசைக்கருவியாக மாற்றியுள்ளார். முதலில் அவர் பெரிய சைஸ் கேரட்டை சீவி கூராக்கினார். பின்னர் அதில் துளைகள் போட்டார். பின்னர் அந்த கேரட்டில் துளையிட்ட இடத்தில் பட்டன்களை பொருத்தினார். கேரட்டின் முனையில் ஸாக்ஸபோன் வாய்பகுதியை பொருத்தினார். அதன்பின் வாயினால் ஊதி அருமையாக இசைக்கிறார்.
இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. அதன் கீழ் “உங்கள் இடத்திலேயே இசை உள்ளது” என்று எழுதப்பட்டுள்ளது. கேரட்டில் கிளாரினெட் தயாரித்த ஆஸ்திரேலியரான லின்ஸி போலக், ஓர் அரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் அதை எல்லோரிடமும் காண்பித்தார். பின் அதன் மூலம் இசைத்துக் காட்டினார். இதைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவருக்கு கரவொலி எழுப்பி தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த விடியோ இணையதள பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிலர் “சூப்பர்ப்” என்றும் வேறு சிலர் “பிரில்லியன்ட்” என்றும் பாராட்டியுள்ளனர்.
“உங்களைச் சுற்றியே இசையுள்ளது. அதன் மூலம் மகிழ்ச்சி அடையுங்கள்” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “ஒரு கைதேர்ந்த கலைஞரால் எப்படியும் எதை வைத்தும் சாதிக்க முடியும். அதற்கு சிறந்த உதாரணம் லின்ஸி போலக்” என்று பதிவிட்டுள்ளார்.
மூன்றாவது நபர், “ எங்கிருந்தாலும் இசையை கண்டு ரசிப்பது புதையலைக் கண்டுபிடிப்பது போன்றது. மழைத்துளியிலும் இசை உள்ளது. பிரிட்ஜின் சத்தத்தில்கூட இசை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று நான்காவது நபர் கருத்து பதிவிட்டுள்ளார்.
மஹிந்திரா பகிர்ந்த இந்த விடியோவை 4 லட்சத்துக்கும் மேலானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். 5000-த்துக்கும் மேலானவர்கள் லைக்ஸ் போட்டுள்ளனர்.