மோக்கா புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 81 பலர் மாயம் !

மோக்கா புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 81 பலர் மாயம் !

மியான்மரில் மோக்கா புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் கடந்த 14 ஆம் தேதி வங்கதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது.

இந்த அதி தீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் கரையைக் கடந்தபோது வங்கதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

மேலும் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார், சட்டோகிராம் உள்ளிட்ட சில நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அதேபோல் மியான்மரில் புயல், மழை, வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அங்குள்ள ராக்கென் மாகாணத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புயலின் தாக்கம் குறைந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மியான்மரில் மோக்கா புயலுக்கு 81 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com