மெட்டாவில் மீண்டும் தொடரும் இரண்டாவது கட்ட பணி நீக்க நடவடிக்கை!
சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின், தாய் நிறுவனமான மெட்டா இந்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை இரண்டாவது கட்ட பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க பல்வேறு சவாலான நெருக்கடியான பிரச்சனைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், இது போல பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. இது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
இந்த பணி நீக்க நடவடிக்கையானது கடந்த ஆண்டு இறுதியில் செய்யப்பட்டது. அந்த நடவடிக்கைக்கு பின்னர் தற்போது மீண்டும் நடை பெற உள்ளது. முன்னதாக நிறுவனம் பல்வேறு துறை சார்ந்த அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 13 சதவீதம் அல்லது 11,000 பேரை பணி நீக்கம் செய்தது.

இந்த புதிய பணி நீக்க நடவடிக்கையில் யாரெல்லாம் இருக்க போகிறார்களோ என்ற பதற்றமும் இருந்து வருகின்றது. இரண்டாவது கட்ட பணி நீக்கமான இந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது பணியினை இழக்கலாம் என தெரிகிறது. இந்த பணி நீக்கத்தில் எந்த ஊழியர்கள் எல்லாம் இருக்க போகிறார்கள் என்ற பட்டியலை தலைமை நிர்வாகம், துணை தலைவர்களிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் வருவாய் விகிதமானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், மெட்டா நிறுவனம் பெரும் மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் விளம்பர வருவாய் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் இத்தகைய செலவு குறைப்பு நடவடிக்கையானது வந்துள்ளது.