விமானத்தை வெடிக்க வைத்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

விமானத்தை வெடிக்க வைத்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

யூடியூபில் அதிக வியூஸ்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது விமானத்தை வெடிக்க வைத்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் டிரெவர் ஜேக்கப் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வித்திக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களிலேயே மூழ்கி உள்ள பலர் தங்களுக்கு அதிக பார்வைகள், லைக்குகள் வரவேண்டும் என்பதற்காக விசித்திரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, யூடியூபில் வீடியோவை பதிவேற்றி அதிக வியூஸ்கள் சென்றால், அதற்கு ஏற்றார் போல் பணம் கிடைக்கும் என்பதால், யூடியூப் சேனல்கள் தொடங்கி வீடியோக்களை பதிவிடுகின்றனர். இதில் எத்தனையோ பேர் அவர்களின் உண்மையான திறமையைப் பயன்படுத்தி காணொளிகள் பதிவிட்டாலும், சிலர் அதிக பார்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமாகவும், பிறர் முகம் சுளிக்கும் வகையிலும் நடந்து கொள்வது அதிகமாகிவிட்டது. 


இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டிரெவர் ஜேக்கப் என்ற இளைஞர் யூட்யூபில் அதிக பார்வைகள் வரவேண்டும் என்பதற்காக, ஒரு விமானத்தையே விபத்துக்குள்ளாக்கி படம் பிடித்துள்ளார். 2021ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் பட்ரேஸ் தேசிய வனப்பகுதியில், சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதை இயக்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூட்யூபர் ட்ரெவர் ஜேக்கப். 

அவர் அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே திடீரென என்ஜின் செயலிழந்து விட்டதால் தனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் திடீரென விமானத்திலிருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதித்துவிட்டார். அந்த சிறிய விமானம் மேலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதை படம் பிடித்து, யூடியூபில் பதிவேற்றினார். இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. 

இந்த காணொளியானது அமெரிக்க விமான ஒழுங்குமுறை போக்குவரத்து நிர்வாகத்தின் கவனத்திற்கும் சென்றது. அவர்கள் இதுகுறித்து விசாரணை செய்ததில், விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறிய நேரத்தில் அவர் கட்டுப்பாட்டரையை தொடர்பு கொள்ள முயற்சி செய்யவில்லை என்பதையும், விமான எஞ்சினை மீண்டும் இயக்க எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். 

இதனால் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் விசாரணையின் தன் மீது தவறு இருப்பதாக ஜேக்கப் ஒப்புக்கொண்டார். இதனால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யூடியூபில் அதிக வியூஸ்களுக்கு ஆசைப்பட்டு தற்போது மிகப்பெரிய சிக்கலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறார் ஜேக்கப்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com