பேரழிவைத் தாங்கி மனித குலம் மீண்டும் தழைக்க இந்த நாடுகளே உதவக் கூடும்: புதிய ஆய்வு முடிவுகள் வெளியீடு!

பேரழிவைத் தாங்கி மனித குலம் மீண்டும் தழைக்க இந்த நாடுகளே உதவக் கூடும்: புதிய ஆய்வு முடிவுகள் வெளியீடு!

அணுசக்தி பேரழிவைத் தாங்கி உயிர்களைத் தக்க வைக்கும் தன்மை கொண்ட பாதுகாப்பான நாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தனர். அவர்களது தேடல் ஒருவழியாகப் பலனளித்திருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியாவை அவர்கள் அத்தகைய திறன் மிக்க நாடுகளில் ஒன்றாகத் தகுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா மட்டுமல்ல அதன் அண்டை நாடான நியூஸிலாந்தும் அணுசக்தி பேரழிவைத் தாங்கி உயிர்கள் மீட்சி பெற உதவும் நாடுகளில் ஒன்றாகவே விளங்குகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அணுசக்தி பேரழிவைத் தாங்கி, சரிந்த மனித நாகரிகத்தை மீண்டும் துளிர்க்க வைக்க உதவுவதற்குரிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் தங்கள் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரிஸ்க் அனாலிசிஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், அணு ஆயுதப்போர், சூப்பர் வால்கனோ( பிரமாண்ட எரிமலை) தாக்குதல் அல்லது விண்கல் தாக்குதல் போன்ற பேரழிவு காலங்களுக்குப் பிறகு இருண்டு கிடக்கும் இந்த பூமியில் எஞ்சியுள்ள் மக்கள் மீண்டு எழப் போதுமான உணவை உற்பத்தி செய்யக்கூடியதாக ஒரு சில தீவு நாடுகள் மட்டுமே உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மட்டுமல்ல, ஐஸ்லாந்து, சாலமன் தீவுகள் மற்றும் வனுவாட்டு ஆகிய நாடுகளும் அடங்கும்.

பேரிடர்கள் நிகழ்ந்து போன மிகக் கடுமையான சூழ்நிலையில் கூட இந்த பூமியில் எங்கேனும் ஓரிடத்தில் மக்கள் உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் அமையுமா என்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்ட போது, அவர்கள் 38 தீவு நாடுகளை 13 காரணிகளின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தனர், அவற்றில் கிடைத்த முடிவுகள் அபோகாலிப்டிக் உலகில் உயிர்வாழ்வதற்கான சிறந்த வாய்ப்பைத் தரும் நாடுகள் எவை என்பதைக் கணிக்க அவர்களுக்கு உதவின.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து - இருநாடுகளுமே வலுவான விவசாய உற்பத்தியாளர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த இரு தீவு நாடுகளுமே வடக்கு அரைக்கோள அணுசக்தி வீழ்ச்சியின் சாத்தியமான தளங்களிலிருந்து விலகி - ஆய்வாளர்களின் தேடுதல் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர், இதில் ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

"ஆஸ்திரேலியாவின் உணவு வழங்கல் திறன் மிகப்பெரியது, பல மில்லியன் கணக்கான கூடுதல் மக்களுக்கு உணவளிக்கும் திறன் கொண்டது" என்று மேற்கண்ட ஆய்வு கூறுகிறது. பிற தீவுகளுடன் ஒப்பிடும் போது ஆஸ்திரேலியாவின் அபாரமான உள்கட்டமைப்பு, மிகப்பெரிய உபரி ஆற்றல் திறன், உயர் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் போன்ற அனைத்துக் காரணிகளுமே அதை இந்த தீவு நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்க உதவியது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com