டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவிலும் தடை

டிக்-டாக் செயலிக்கு   அமெரிக்காவிலும் தடை

‘டிக்டாக்‘ என்ற சீன சொல்லுக்கு “அதிரும் அலைகள்“ என்று பெயர். சீன செயலியின் மூலம் எளிதாக குறு நிகழ்படங்களை (live shows) உருவாக்கவும், பகிர்ந்துகொள்ளவும் முடியும். ‘பைட்டேன்ஸ்‘ எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஓர் ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியானது 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 முதல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் இந்தியா.

டிக் டாக் செயலியின் மூலமாக ஆபாசமாக நடன அசைவுகள் இருப்பதாகவும் சமூக சீரழிவிற்கு வழிவகுப்பதாகவும் பலதரப்பில் இருந்து கருத்துக்கள் வந்ததன் அடிப்படையில் அதனைத் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில், வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் இந்த செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, இதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் "டிக்டாக்" செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து டிக்டாக் நிறுவனம், உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. உச்ச நீ‌திமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்கியது.

டிக்டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத்தொடர்ந்தது. உச்சநீதிமன்றம், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. டிக்டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் ஆணையிட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆபாச நடன அசைவுகள், சமூக சீர்க்கேடு நடன அசைவுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் டிக்டாக் செயலிக்கான தடையை நீக்கியது.

ஆனால், டிக்டாக்குக்கு ஆபத்து வேறு வகையில் வந்தது. இச்செயலியானது தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செயலிகளுக்கு 29 ஜூன், 2020 அன்று இந்திய அரசு அதிரடியாக தடை செய்தது.

இபோது இதே மாதிரி டிக்டாக் மிக அதிகமாக பரவியிருக்கும் அமெரிக்காவில் இந்தச்செயலி தடை செய்யப்படவிருக்கிறது. இதற்கு அமெரிக்க உளவு அமைப்பு எப்பிஐ சொல்லும் காரணம் “சீனா உளவு பார்க்கக் கூடிய டிக்டாக் செயலியால் அமெரிக்காவுக்கு ஆபத்து.“

டிக்டாக் மூலம் அமெரிக்கர்களை சீன அரசு உளவு பார்க்கக் கூடிய வாய்ப்பிருப்பதால், அந்த செயலியால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக எப்பிஐ இயக்குநர் கிறிஸ் ரே கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவை போல் தற்போது அமெரிக்காவும் டிக்டாக்கால் பாதுகாப்பு அச்சுறுத்தல் கவலை கொள்ளத் தொடங்கி உள்ளது.

அண்மையில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐயின் இயக்குநர் கிறிஸ் ரே, ‘‘டிக்டாக் செயலி முழுக்க முழுக்க சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனமாகும். அதன் செயல்பாட்டை சீன அரசு கட்டுப்படுத்துகிறது. எனவே, டிக்டாக்கின் உள்ளடக்கங்களை கையாளவும், சீன அரசு விரும்பினால் அதன் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தவும் முடியும். மேலும், அமெரிக்கர்களின் தகவல்களை பெறும் டிக்டாக் அவற்றை சீன அரசுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புண்டு. இத்தகவல் மூலம் அமெரிக்கர்களை சீன அரசால் உளவு பார்க்க முடியும். எனவே இது மிகப்பெரிய தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கவலை அளிக்கிறது’’ என்றார். எனவே அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், டிக்டாக்கை தடை செய்யவும், ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவும் அழுத்தம் கொடுத்தார். ஆனால் பலம் வாய்ந்த டிக்டாக் லாபி அதை நிறுத்திவிட்டது.

ஆனால், வரும் புத்தாண்டில் இந்த செயலி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com