முன்னாள் ஜனாதிபதிக்கு
நூறு மில்லியன் ரூபா அபராதம்!

முன்னாள் ஜனாதிபதிக்கு நூறு மில்லியன் ரூபா அபராதம்!

லங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் எட்டு தீவிரவாதிகள் உட்பட மொத்தம் 277 பேர் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் மீதான தீர்ப்பை அந்நாட்டு உயர்நீதி மன்றம் இன்று வழங்கியுள்ளது.

அந்தத் தீர்ப்பின்படி, 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்தபோதிலும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரசு புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா அபராதமாக செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரசு புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்குக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நஷ்ட ஈடு தொகையை தமது சொந்த பணத்திலிருந்து செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கம் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசாங்கத்தால் ஐந்து லட்சம் ரூபா வீதம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அரசு புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஆறு மாத காலத்துக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிஹாரே, எல்.ரி.பீ.தெஹிதெனிய, முர்த்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டீ.நவாஸ், சிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழுவால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com