ஜப்பானில் 20 இலட்சமாக அதிகரித்த சுற்றுலாப் பயணிகள்

மாதிரி படம்
மாதிரி படம்

கொரோனா பாதிப்புக்குப் பிறகு முதல் முதலாக ஜப்பானில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் ஜப்பானுக்கு வந்துசென்று சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.7 இலட்சமாகப் பதிவாகியுள்ளது. 2020 பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு இருபது இலட்சம் பேர் ஜப்பானுக்கு சுற்றுலாவாக வந்திருப்பது இப்போதுதான் என்று ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது.

டோக்கியோவின் உயர்மதிப்பு பொருள் வர்த்தகச் சந்தை மாவட்டமான கியூபே, கொரோனாவுக்குப் பிறகு அதிகரித்துள்ள சுற்றுலா வளர்ச்சியால் மலர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்கு முந்தைய விற்பனையில் 70 சதவீதம் அளவை இந்த நகரம் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டை ஒப்பிட, உணவகங்களில் பழைய நிலைமை திரும்பிவிட்டது என்கிறார்கள், உள்ளூர்  வர்த்தகர்கள். முக்கிய காரணம், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்புதான் என்று கூறுகிறார், உணவக உரிமையாளரும் சமையல் கலைஞருமான யொசுகே இமாடா.

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் 50 ஆயிரம் யென்(யென்= இந்தியப் பணம் 0.58 ரூபாய்)கள் வரை செலவழிப்பார்கள்; அவர்களுக்கு இந்தத் தொகை பெரியதாகத் தோன்றாது என்கிறார் இமாடா.தற்போது, வெப்ப அலைகள் தாக்கிவரும் நிலையிலும், சுற்றுலாப் பயணிகள் ஜப்பானில் குவிந்து வருகின்றனர். நாணய மதிப்பு சரிந்துள்ளதால் சில பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மலிவான விடுமுறைப் பயணங்களாக அமைந்திருப்பதும், கூடுதல் சாதகம்.

சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், சில்லரை விற்பனைக் கடைகளில் விற்பனைக்கு பாதகம் இல்லாதபடி விலையைக் கூட்டியும் உள்ளனர். இதனால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் உள்ள ஜப்பானின் பணவீக்கத்துக்கும் உதவியாகவும் உள்ளது.

கியூபே நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சலுகை விலை உணவு விற்பனையை தற்காலிகமாக நிறுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான பல வகை மீன்கள் மடங்குக் கணக்கில் உயர்ந்துகொண்டே சென்றதால், அதற்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை என நகர வணிகர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு அந்தச் சலுகை தேவையே இல்லாமல் போய்விட்டது. உள்நாட்டுப் பயணிகளுக்கு அறைகள் கிடைக்காதபடி பெரும்பாலும் வெளிநாட்ட்டுப் பயணிகள் முன்பதிவு செய்துவிடுகின்றனர் என்கிறார்கள் உள்ளூர் விடுதியாளர்கள்.

ஜப்பானைப் பொறுத்தவரை கொரோனாவுக்கு முன்னர் 2019இல் 3.2 கோடி பேர் சுற்றுலாவாக அந்த நாட்டுக்குள் சென்றுவந்துள்ளனர். அந்த அளவுக்கு எதிர்பார்க்க வாய்ப்பே இல்லை என்பதை உள்நாட்டு சுற்றுலா வர்த்தகத் துறை அறிந்துள்ளது. ஆனாலும் கடந்த ஆறு மாதங்களில் 1.07 கோடி பேர் ஜப்பானுக்கு சுற்றுலா வந்துள்ளனர் என்று ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஹனெடா விமானநிலையத்தில் இரண்டாவது முனையத்திலிருந்து சர்வதேச விமான சேவையை நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளனர்.  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சேவை தொடங்கியுள்ளது.ஜப்பானில் கடந்த மே மாதம் 19 இலட்சம் பேர்; ஜூனில் 20.7 இலட்சம் பேர் என சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தாலும், 2019 ஜூன் மாதத்து அளவில் இன்னும் 28 சதவீதம் குறைவாகவே இருக்கிறது என்றும் குறைபட்டுக்கொள்ளவும் செய்கின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com