துருக்கி நிலநடுக்கம்: மீட்பாளரை பிரிந்து செல்ல மறுத்த பூனை!

துருக்கி நிலநடுக்கம்: மீட்பாளரை பிரிந்து செல்ல மறுத்த பூனை!

அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை 46,000 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நிலநடுக்கத்தின் எதிரொலியாக துருக்கியில் 2,64,000-த்துக்கும் மேலான குடியிருப்புகள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது துருக்கி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

ஆனாலும் அந்த நாடு துரிதமாக செயல்பட்டு, தடைகளைக் கடந்து பலரது உயிர்களையும் காப்பாற்றியது. மீட்புப் படையினரின் இடைவிடாத முயற்சியால் ஏராளனமான மனித உயிர்களும், விலங்குகளும் காப்பாற்றப்பட்டன. இது தொடர்பான விடியோக்களும் வெளிவந்தன.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த நாட்டு தீயணைப்பு படை வீரர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு பூனையை பத்திரமாக மீட்டார். ஆனால், என்ன அதிசயம். அவரை விட்டு பிரிந்து செல்ல அந்த பூனை மறுத்துவிட்டது.

இது தொடர்பான விடியோவை உக்ரைன் நாட்டு உள்விவகாரங்கள் துறை அமைச்சரின் ஆலோசகரான அன்டன் ஜெராசென்கோ கடந்த பிப். 16 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். ரப்பிள் என பெயரிடப்பட்ட அந்த பூனை மீட்பாளரின் தோளில், அவரது அரவணைப்பில் ஜம்மென்று அமர்ந்திருந்த படம் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு விடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய ரப்பிள் என்ற பூனை மீட்கப்பட்ட படத்தை நேற்று நான் வெளியிட்டிருந்தேன். அந்த பூனை இப்போது மீட்பாளரை பிரிந்து செல்ல மறுக்கிறது. பூனையை மீட்ட தீயணைப்பு வீர்ரின் பெயர் அலி காகஸ் என்பது தெரியவந்துள்ளது. தம்மிடமிருந்து பிரிய மறுக்கும் அந்த பூனையை அவர் தத்தெடுத்துள்ளார். அந்த பூனைக்கு ‘என்காஸ்’ என பெயரிட்டுள்ளார். (துருக்கி மொழியில் என்காஸ் என்றால் ரப்பிள் என்று அர்த்தம்). இருவரும் மகிழ்ச்சியுடன் வாழட்டும்” என்று பதிவிட்டுள்ளார் ஜெராசென்கோ.

இந்த விடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏறக்குறைய 5 லட்சம் பேர் இதை பார்வையிட்டுள்ளனர். சுமார் 1.7 லட்சம் பேர் விடியோவுக்கு பதில் போட்டுள்ளனர்.

மிகவும் அருமையான செய்தி. இருவரையும் கடவுள் காப்பாற்றட்டும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இதைவிட மகிழ்ச்சி இருக்க முடியுமா என்று கேட்டு மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மீட்கப்பட்ட இடத்தில் அந்த பூனை அவரின் தோளில் மீது அமர்ந்திருப்பதையும், அதை அவர் புன்னகையுடன் கொஞ்சுவதையும் விடியோவில் பார்த்தேன். இதைவிட வேறு என்ன வேண்டும்? என்று மூன்றாவது நபர் பதிவிட்டிருந்தார்.

இன்றைய நாளில் அநேகமாக சிறந்த செய்தி இதுவாகத்தான் இருக்கும் என்று நான்காமவர் ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தார்.

உண்மையான வீரர் இவர்தான். பார்ப்பதற்கே அழகாக இருந்த்து. கடவுள் அந்த மீட்பாளரையும், குட்டிப் பூனையையும் ஆசிர்வதிக்கட்டும் என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com