சீட் பெல் அணியாமல் காரில் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்!

சீட் பெல் அணியாமல் காரில் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்!

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீட் பெல்ட் அணியாமல் ஒருவர் காரில் சென்ற விடியோ சமூக வலைத்தளத்தில் வெளிவந்ததை அடுத்து அந்த நபருக்கு 100 புவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக லங்காஷையர் போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதை பிரதமர் ரிஷி சுனக் ஒப்புக்கொண்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு தவறான முடிவு. நான் வடமேற்கு இங்கிலாந்தில் காரில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றபோது அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் விடியோ எடுப்பதற்காக சீட் பெல்ட்டை அகற்றினேன். ஆனால், திரும்ப அதை அணிவதற்குள் எனது கார் புறப்பட்டுவிட்டது. நடந்த தவறுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். ஒவ்வொருவரும் காரில் செல்லும்போது சீட் பெல் அணிவது கட்டாயம் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை” என்றும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்ததாக அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் போதுமான மருத்துவக் காரணங்கள் இல்லாமல் ஒருவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்று பிடிபட்டால் அவருக்கு அந்த இடத்திலேயே 100 பவுண்டு அபராதம் விதிக்கப்படும். நீதிமன்றம் சென்றால் 500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் இங்கிலாந்தில் 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கார், வேன் மற்றும் இதர சரக்கு வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மருத்துவக் காரணங்களுக்காக டாக்டரின் சான்றிதழ் பெற்றவர்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 30 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com