உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 500 மில்லியன் டாலர் ஆயுத உதவிக்கு உறுதி!

உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 500 மில்லியன் டாலர் ஆயுத உதவிக்கு உறுதி!

உக்ரைன் நாட்டுக்கு ரகசியமாக திடீர் பயணம் மேற்கொண்டு உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒருமுறை உக்ரைனுக்கு நேரில் வந்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என விடுத்திருந்தார்.

மேலும் ஒருவாரத்திற்கு முன்பு ஜெலன்ஸ்கி அளித்த ஒரு பேட்டியில், "நானும் அதிபர் பைடனும் சில முறை சந்தித்துள்ளோம். உக்ரைனுக்கு வருமாறு நான் அவரிடம் அழைப்புவிடுத்துள்ளேன். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் உக்ரைன் வருவதில் அவர் மகிழ்ச்சி அடைவர் என்றே நம்புகிறேன். அவர் வருகை தந்தால் அது எங்கள் தேசத்திற்கான அமெரிக்க ஆதரவை உலகிற்கு தெரிவிக்கும் மிகப் பெரிய சமிக்ஞையாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை (பிப். 20) ஜோ பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். உக்ரைன் அதிபர் மாளிகையில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் பைடன் சந்தித்துப் பேசினார். அப்போது ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலினாவும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின்போது உக்ரைன் நாட்டுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள், ஏவுகணைகள், நவீன ரடார்கள் வழங்கப்படும் என்று பைடன் உறுதியளித்துள்ளார். மேலும் உக்ரைன் நாட்டுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தாக்குதலைத் தொடங்கி வரும் 24 ஆம் தேதியுடன் ஓராண்டு பூர்த்தியாகிறது. இந்த நிலையில் போர் தொடங்கிய பின் முதன் முறையாக பைடன், உக்ரைன் சென்றுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஜோ பைடனின் உக்ரைன் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதிலும், கடைசி நேரத்தில் இதுபற்றி ரஷியாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கீவ் நகரில் பைடன் இருக்கும் நேரத்தில் குண்டுகள், ஏவுகணை தாக்குதல் நடைபெறாமல் இருக்கவே தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த நேரத்தில் தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இருவரும் ரஷிய-உக்ரைன் போரில் உயிரிழந்தவர்களுக்காக எழுப்பப்பட்ட நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதிபர் பைடன் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சிறிய விமானத்தில் அவர் பயணம் செய்தார். அவருடன் ஆலோசகர்கள், பாதுகாவலர்கள், 2 பத்திரிகையாளர்கள், மருத்துவக் குழுவினர் மட்டுமே உடன் சென்றனர். இந்த பயணம் ஆபத்தானது என ஜோ பைடனிடம் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் கீவ் நகருக்குச் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் மீதான போருக்காக ரஷியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வது தொடர்பாக சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருந்தது.

ஆனால், போர்களத்துக்கு இடைவிடாமல் ஆயுதங்கள் சப்ளை செய்வது அமெரிக்காதானே தவிர நாங்கள் அல்ல என்று சீனா பதிலடி கொடுத்திருந்த்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com