‘வங்கி திவாலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை உறுதி’: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

‘வங்கி திவாலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை உறுதி’: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

மெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்காவின் பங்கு சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கியும் தற்போது கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து உள்ளதால் இதன் பங்கு விலையும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்த வங்கி நேற்று முன்தினம் வாடிக்கையாளர் சேவை இன்றி மூடப்பட்டது.

அதைத் தொடர்ந்து திவாலான வங்கிகளின் வாடிக்கையாளர் பணத்தை மீட்டெடுக்க அமெரிக்க நிதி அமைப்புகள் பலவும் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. அது மட்டுமின்றி, மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர் நலன் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருவது அமெரிக்க வங்கி வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “வங்கி திவாலுக்குக் காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் வங்கிகள் பாதுகாப்பாகவே உள்ளன. எனினும் பெரிய வங்கிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் வரும் நாட்களில் நிச்சயமாக மேம்படுத்தப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளினால் இந்த நிலைகள் இனி ஏற்படாது என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர், “இந்த நிகழ்வு ஏன் நடந்தது? அமெரிக்கர்களுக்கு இதுபோன்று இனி நடக்காது என்று உங்களால் உறுதி அளிக்க முடியுமா?” என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஜோ பைடன் தவிர்த்து விட்டார். ஆனாலும், வங்கிகள் திவால் ஆன நிகழ்வு அமெரிக்க ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com