விற்பனைக்கு வரும் காதலர் தீவு!
குரோஷியா நாட்டின் அட்ரியாடிக் பகுதியில் உள்ளது ஒரு தீவு. இது இதயம் வடிவில் அமைந்துள்ளதால் இதை, ‘காதலர் தீவு’ என்று அனைவரும் அழைக்கின்றனர். வருடம் முழுக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தத் தீவுக்கு வந்து செல்கின்றனர். ‘கேலெஸ்ஞ்ஜாக்’ என்ற பெயர் கொண்ட இந்தத் தீவில் நட்சத்திர விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் போன்று ஏதும் கிடையாது. என்றாலும், இந்தத் தீவுக்கும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பிச் செல்கின்றனர். ஆண்டு தோறும் இந்தத் தீவில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
முப்பத்திரண்டு கிராமி விருதுகள் பெற்று சாதனை படைத்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி பியோன்சே தனது 39வது பிறந்த நாளை இந்த இதய வடிவ தீவில்தான் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இவர் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீவுக்குச் சென்று சில நாட்கள் அங்கு தங்குவதையும் வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் புகழ் பெற்ற முன்னாள் கூடைப் பந்து வீரர் மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கூட இந்தத் தீவுக்கு அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
உலகம் முழுக்க இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டுவரும் வேளையில், ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டு ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவோடு இதயம் போல் காட்சி அளிக்கும் இந்தக் காதலர் தீவின் ஒரு பகுதி, அதாவது நாற்பதாயிம் சதுர மீட்டர் நிலம் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விற்பனை நிலத்தின் விலை 115 கோடி ரூபாய் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். இந்த இதய வடிவத் தீவில் இடம் வாங்க பலரும் ஆர்வமாக இருந்தாலும், அந்தத் தீவின் உரிமையாளரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.