இங்கிலாந்து சென்றார் குடியரசு துணைத் தலைவர் சார்லஸ் மன்னராக முடிசூட்டும் விழாவில் பங்கேற்கிறார்!
இளவரசர் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூட்டிக் கொள்ளும் விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தமது மனைவியுடன் இங்கிலாந்து சென்றார்.
சார்லஸ் முடிசூட்டுவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இருக்கின்றனர்.
இளவரசர் சார்லஸ் மன்னராக முடிசூட்டிக் கொள்ளும் விழாவில் பங்கேற்க வருமாறு இங்கிலாந்து சார்பில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் ஹைகமிஷன் அதிகாரி அலெக்ஸ் எல்லிஸ், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை நேரில் சந்தித்து, மன்னராக சார்லஸ் முடிசூட்டிக் கொள்ளும் விழா இங்கிலாந்தில் வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் நடைபெறுவதாகவும் இதற்காக விவரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறியதுடன், இந்தியா சார்பில் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதன் மூலம் இந்தியா-இங்கிலாந்து உறவு மேலும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருந்தார்.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே என்னுமிடத்தில் மன்னர் முடிசூட்டு விழா சனிக்கிழமை நடைபெறுகிரது.
கடைசியாக 1953 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் ராணியாக பதவியேற்றார். அதன் பிறகு ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு சார்லஸ் மன்னராக பதவியேற்கும் நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அரச குடும்பத்தின் தகவல்படி சனிக்கிழமை காலை இளவரசர் சார்லஸ் மற்றும் காமில்லா இருவரும் பக்கிங்ஹாம் அரண் மனையிலிருந்து ஊர்வலமாக வெஸ்ட்மினிஸ்டர் அப்பே அரங்கிற்கு சாரட் வண்டியில் அழைத்து வரப்படுகிறார். இந்த சாரட் வண்டி 2012 ஆம் ஆண்டு ராணி எலிசபெத்தின் 25 வது ஆண்டு பதவியேற்பு நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்டதாகும்.
சார்லஸ் முடிசூட்டு விழா தினத்தன்று லண்டனில் இரண்டு ஊர்வலங்கள் நடைபெற உள்ளன. முதலில் சார்லஸ் மற்றும் காமிலா பக்கிங்ஹாம் அரண்மணையிலிருந்து விழா நடைபெறும் இடத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். மற்றொரு ஊர்வலம் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பிறகு சார்லஸ், மீண்டும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அதன் பின் அவர் அரண்மனையின் பால்கனியிலிருந்து மக்களை சந்திக்கிறார்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நீண்டகாலமாக சுமுகமான உறவு இருந்து வருகிறது. இந்த உறவு ஆண்டாண்டு காலமாக வலுப்பட்டு வருகிறது. ராணி எலிசபெத் மறைவையொட்டி அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க கடந்த செப்டம்பர் மாதம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டன் சென்றது குறிப்பிடத்தக்கது.