
முடியாட்சி முறை போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் பிரிட்டனில், அதிக ஆண்டுகள் ராணியாக வாழ்ந்த இரண்டாம் எலிசபத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து இங்கிலாந்தின் மன்னனாக அறிவிக்கப்பட்ட அவருடைய மூத்த மகன் சார்லஸ், அவரது மனைவி கமிலாவின் முடிசூட்டு விழா, மே மாதம் 6 தேதி நடைபெற உள்ளது.
1981 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற சார்லஸ் டயானாவின் திருமண வைபவத்தை உலகமே வியந்து பார்த்ததைப் போல, சார்லஸ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கமிலாவின் முடி சூட்டு விழாவை உலக மக்கள் யாவரும் வியந்து பார்க்க வேண்டுமென்பது ஃபக்கிங்ஹாம் அரண்மனையின் விருப்பமாக உள்ளது.
இந்த விழாவில் சார்லஸை அழைத்துச் செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. மற்றும் ஒரு புதிய சாரட்டு வண்டியும் செய்யப்பட்டுள்ளது. மன்னர் மூன்றாம் சார்லஸ் ஊர்வலம் செல்ல உள்ள இந்த பாரம்பரிய சாரட்டு வண்டி, நான்காம் வில்லியம் ஆட்சி நடைபெற்ற 1831 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு முடிசூட்டு விழாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1953 ஆம் ஆண்டு இந்த வண்டியில் தான் இரண்டாவது எலிசபெத் ராணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஏழு மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் உயரமும், நான்கு டன் எடையுடைய இந்த சாரட்டு வண்டி, முழுவதுமாக தற்போது தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அரச குடும்பத்திற்கு சொந்தமான அரண்மனைகளில் இடம்பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க புராதான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்டமான சாரட்டு வண்டியை அலங்கரிக்கப்பட்ட எட்டு குதிரைகள் இழுத்துச் செல்லும். மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பக்கிங்ஹாம் அரண்மனையில் Westminster Abbey தேவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த ஊர்வலத்தை லண்டனில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக கண்டு ரசிக்க உள்ளனர். இங்கிலாந்து மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டபோது, முடியாட்சிக்கு எதிரான குரல் அங்கு ஓங்கி ஒலித்தது. அவர் மீது முட்டை வீச்சு சம்பவமும் நடைபெற்ற நிலையில், முடிசூட்டு விழாவின்போது இதே எதிர்ப்புக் குரல்கள் கேட்குமா அல்லது வரவேற்புக் குரல்கள் கேட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.