என்னது? இனிமேல் வாரத்தில் நான்கு நாட்கள்தான் வேலை நாட்களா?

என்னது? இனிமேல் வாரத்தில் நான்கு நாட்கள்தான் வேலை நாட்களா?

உலகின் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையாக வாரத்தில் நான்கு நாள் வேலைத்திட்டம் தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சோதனையில் பங்கேற்ற பெரும்பாலான நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை என்ற புதிய மாதிரியையே பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளன.

பிரிட்டனில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 61 நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான இந்த 6 மாத சோதனை திட்டத்தில் பங்கேற்றன.

வாரத்தின் ஐந்துநாள் வேலைக்கான ஊதியத்தின் அடிப்படையில் லாபநோக்கில்லாமல் இந்த நான்கு நாள் வேலைதிட்டம் சோதனை அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. சுமார் 3,000 தொழிலாளர்கள் இதன்படி வழிநடத்தப்பட்டனர்.

ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து போஸ்டன் கல்லூரி முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான ஜூலியட் ஷோர் கூறுகையில், பல்வேறு பணியிடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் முடிவுகள் பெரும்பாலும் நிலையானதாக இருந்தது. பல்வேறு வகையான நிறுவனங்களுக்கு இடையே இது ஒரு புதிய கண்டுபிடிப்பாகும்.

சில சுவாரஸ்யமான வேறுபாடுகளும் உள்ளன. இலாப நோக்கமற்ற மற்றும் தொழில்முறை சாராத நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது உடற்பயிற்சி நேரம் அதிகரித்ததாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் கட்டுமானம் மற்றும் தயாரிப்புத்துறைகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் வேலைப் பளு மற்றும் தூக்கமின்மை பிரச்னைகள் குறைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர் என்கிறார் ஷோர்.

ஒட்டுமொத்தமாக எல்லா நிறுவனங்களுமே வாரத்தில் நான்கு நாள் வேலைத் திட்டத்தை தொடரும் எண்ணத்தில் உள்ளன. குறிப்பாக 91 சதவீத நிறுவனங்கள் இதை நிச்சயம் தொடரப்போவதாக அறிவித்துள்ளன. 4 சதவீதம் நிறுவனங்கள் வாரத்தில் நான்குநாள் வேலைத் திட்டத்தை தொடருவதா வேண்டாமா என்று முடிவு எடுக்க முடியாமல் உள்ளன. மேலும் 4 சதவீத நிறுவனங்கள் மட்டும் வாரத்தில் நான்கு நாள்வேலைத் திட்டம் சாத்தியமில்லை. அதைத் தொடரமுடியாது என்று தெரிவித்துள்ளன.

நிறுவனங்கள் தங்களின் சோதனை அனுபவத்தை சராசரியாக 10-க்கு 8.5 புள்ளிகளாக மதிப்பிட்டுள்ளன. வணிக உற்பத்தித்திறன் மற்றும் வணிக செயல்திறன் ஒவ்வொன்றும் 10-க்கு 7.5 புள்ளிகளாக மதிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த சோதனை காலத்தில் வருவாய் 35 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. பணிக்கு வராதவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவும், பணியமர்த்துதல் அதிகரித்தும் காணப்பட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஊழியர்களின் நலன் மற்றும் உடல் ஆரோக்கியமும் சீரடைந்துள்ளது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களின் நல்வாழ்வு மேம்பட்டுள்ளது. உடற்பயிற்சிக்கான நேரம் அதிகரித்துள்ளது. ஊழியர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை மற்றும் வேலையில் திருப்தி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மன அழுத்தம் குறைந்து, உடல் உழைப்பு அதிகரித்து, சோர்வு குறைந்தும் காணப்பட்டது. தூக்கமின்மை பிரச்னையும் கணிசமாக குறைந்திருந்த்து.

வாரத்தில் நான்கு நாள் வேலை பயனுள்ளதாக இருப்பதாக ஆண், பெண் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். உடல், மனம் ஆரோக்கியமாக இருப்பது போல் உணர்கிறார்கள். வேலையிலும் அவர்களுக்கு திருப்பதி ஏற்பட்டுள்ளது. வேலைக்கு சென்றுவரும் நேரம் குறைந்துள்ளது. அலுவலக வேலையும், வீட்டுவேலையும் சம்மாக உள்ளது. வீட்டையும் குழந்தைகளையும் கவனிக்க முடிகிறது என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் என்கிறார் நான்கு நாள்வேலை ஆய்வு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் டாலே வெல்ஹென்.

இங்கிலாந்து தவிர ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா, பிரேஸில், வடஅமெரிக்க நாடுகளிலும் இதுபோன்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். பிரிட்டனில் இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் உலகநாடுகளைச் சேர்ந்த மக்களும் இதை நிச்சயம் வரவேற்பார்கள் என்கிறார் இந்த ஆய்வு நிறுவனத்தின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான சார்லோட் லாக்ஹார்ட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com