மைக் டைசன் மீது 32 ஆண்டுகளுக்குப் பின் பெண் பாலியல் புகார்!

மைக் டைசன் மீது 32 ஆண்டுகளுக்குப் பின் பெண் பாலியல் புகார்!

முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் மீது ஒரு பெண் பாலியல் வழக்கு தொடுத்துள்ளார். நியூயார்க்கில் அல்பனி நகரில் உள்ள இரவு விடுதியில் அவரை சந்தித்தபோது தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் புகார் கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன். அமெரிக்கவில் வசித்து வருகிறார். கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை குத்துச்சண்டையில் உலக சாம்பியனாக வலம் வந்தார். 20 வயதிலேயே உலக ஹெவி வெயிட் சாம்பியனாகத் திகழ்ந்தவர்.

ஒரு முறை குத்துச்சண்டையில் எதிரியின் காதை கடித்தது, மனைவியை விவகாரத்து செய்தது என பல்வேறு சர்ச்சைகள் மூலம் சிக்கல்களை சந்தித்து தொழில் முறையில் பின்னடைவை சந்தித்தார். (அவர் என்னை மிகவும் கொடுமை படுத்தினார். தாங்கமுடியாத கொடுமைகளை நான் அனுபவித்தேன் என்று மனைவியும் நடிகையுமான ராபின் கிவின்ஸ், விவாகரத்து வழக்கில் கூறியிருந்தார்)

ஒரு கட்டத்தில் குத்துச்சண்டை போட்டியில் வென்றதன் மூலம் சம்பாதித்த பணத்தையெல்லாம் கண்மூடித்தனமாக செலவழித்து கடனாளியானார்.

இந்த நிலையில், முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், 1990 ஆம் ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் செய்துள்ளார்.

நியூயார்க் நகரில், அல்பனி நகரில் 1990 ஆம் ஆண்டில் ஒரு நாள், இரவு விடுதியில் மைக் டைசனை சந்தித்ததாகவும் அப்போது டைசன், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமக்கு 5 மில்லியன் டாலர் (ரூ.40 கோடி) நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு டைசன் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறும் அவர், பிரமாண பத்திரத்தில் சம்பவம் என்று நடந்தது என்று தேதியை குறிப்பிடவில்லை.

இதே காலகட்டத்தில்தான் உலக அழகி போட்டியில் பங்கேற்றவர்களில் ஒருவரான டெய்ஸ்ரீ வாஷிங்டன் என்பவர் மைக் டைசன், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கூறி இண்டியானா போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கில் மைக் டைசனுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 1992 ஆம் ஆண்டு பிப். 10 ஆம் தேதி முதல் மூன்று ஆண்டு காலம் அவர் சிறையில் இருக்க நேர்ந்தது.

டைசனின் சொகுசு காரில் தாம் அமர்ந்திருந்தபோது அவர், தன்னை தொட்டதாகவும், முத்தமிட்டதாகவும் பின்னர் அத்துமீறி பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், அதை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அந்த பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

பெண்ணின் புகாரில் உண்மை இருப்பதாலும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாலும் டைசன் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக அந்த பெண்ணின் வழக்குரைஞர் டாரென் செல்பாக் தெரிவித்துள்ளார். ஆனால், மேல் விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com