அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிய பெண்: 5 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு!

அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிய பெண்: 5 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு!

ரியல் லைஃப் ஸ்டோரி…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லிலியன் எல்பி எனும் 48 வயதுப் பெண்மணிக்கு இது மறுபிறவி என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட நேற்று முன்தினம் வரையிலும் தாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலேயே இன்னும் கூடுதலாக ஒரே ஒருநாள் இருக்க நேர்ந்தால் அப்புறம் அவ்வளவு தான் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது... பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் இறுதிக் கடிதம் எழுதி வைத்து விட்டு வரவிருக்கும் மரணத்திற்காகக் காத்திருப்போம் என்ற அளவுக்கு அவருடைய மன உறுதியும், உடல் வலுவும் குன்றியிருந்தது.

அவருக்கு அப்படி என்ன ஆயிற்று? என்று யோசிக்கத் தோன்றுகிறதா?

லிலியன் தனது வாரஇறுதி விடுமுறையைக் கழிக்க கடந்த வெள்ளியன்று ஆஸ்திரேலியாவின் விக்டோரியா ஸ்டேட் பகுதியைச் சார்ந்த பிரைட் எனும் சிறிய நகரத்துக்குச் சென்றிருக்கிறார். அந்த நகரம் மலைகளாலும், தேசியப் பூங்காக்களாலும் சூழப்பட்டவனப்பகுதி. லிலியன் தான் இருக்கும் இடத்திலிருந்து அந்த நகருக்குச் செல்ல 2 மணி நேரம் ஆகும் எனக்கணக்கிட்டு தனது பயணத்தின் போது சாப்பிட எதுவுமே எடுத்துச் செல்லவில்லை. அவரிடம் காரில் இருந்தது இரண்டு லாலி பாப்புகளும், அவரது அம்மாவுக்குப் பரிசளிக்க என வாங்கி வைத்திருந்த ஒயின் பாட்டிலும் மட்டுமே!

இவற்றுடன் பிரைட்டை அடைந்த லிலியன் அங்கிருந்து டார்ட்மெளத் அணைக்குச் செல்ல முயற்சித்திருக்கிறார். அருகில் உள்ள ஏரியிலிருந்து 2 மணிநேர கார்ப்பயணத்தில் அந்த இடத்தை அடைந்து விடலாம் என தவறாக யூகத்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கிப் பிரயாணித்திருக்கிறார்.

கார் செல்லச் செல்ல அவரது பாதையை ஒட்டி இருந்த புதர்களின் அடர்த்திகூடிக் கொண்டே போனதே தவிர அவரது இலக்கை அடைய முடியவே இல்லை. ஆனாலும், லிலியன் அசராமல் புதர்களுக்கு நடுவில் தென்பட்ட பழைய சிதிலமடைந்த சாலைகள் நடுவில் தனது காரை விரட்டிக் கொண்டு சென்றதில் கடைசியில் லிலியன் சந்தித்தது முட்டுச் சந்தை.

இனிமேற்கொண்டு செல்ல பாதை இல்லாத காரணத்தால், தமது யூகத்தை தவறெனப் புரிந்து கொண்டு காரை ரிவர்ஸ் எடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், அதுவோ அடர்ந்த புதர்கள் நிறைந்த கட்டுப்பகுதி என்பதால் பாதையில் இருந்து இடறிய கார் புதர்களுக்குள் சிக்கிக் கொண்டது . இனிஒரு இஞ்ச் நகர்த்தினாலும் கூட மேலும், மேலும் ஆபத்தில் சிக்கிக் கொள்வதாகத் தான் அர்த்தம் என

உணர்ந்த லிலியன் செய்வதறியாது அப்படியே காரில் அமர்ந்து விட்டார். அவரது துரதிருஷ்டமான நேரத்துக்கு ஏற்ப அங்கிருந்து வேறு எவரையேனும் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மேலும் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டும். அவ்வளவு தூரம் தள்ளித்தான் வேறொரு நகரம் இருக்கிறது. நடுவில் எதுவுமே இல்லாத வறண்ட காட்டுப்பகுதி அது .

லிலியன் இங்கு புதருக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு லிலியனைக் காணாது அதிர்ச்சி அடைந்து விட்டனர். லிலியன் தனது பெற்றோர் மற்றும் பிள்ளைகளிடம் தினமும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கமாம். வழக்கம் போல அவரது அழைப்பை எண்ணி எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதும் சந்தேகம் வந்து காவல்துறை உதவியை நாடி இருக்கிறார்கள்.

லிலியன் சிக்கிக் கொண்ட பகுதியில் அடர்ந்த புதர்கள் செறிந்து இருந்ததால் இணையத்தொடர்பு எட்டமுடியாத நிலையில் செல்சேவையும் துண்டிக்கப்பட்டு இருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் லிலியன் பசி மற்றும் கடும் சோர்வைத் தாங்கிக் கொண்டு தன் காருக்குள்ளேயே காத்திருக்கத் தொடங்கினார்.

அதே நேரத்தில் லிலியனின் குடும்பத்தார் அவர் பயணம் மேற்கொள்வதாய் சொல்லிச் சென்றிருந்த பிரைட் நகரைச் சுற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட அவசர கால காவல்துறை உதவியை நாடி இருந்தனர். அப்படியும் முதல் மூன்று நாட்களில் அவரைக் கண்டறிய எவ்வித தடயங்களும் சிக்கவில்லை. மேலிருந்து தேடுதலில் ஈடுபடச் செய்யும் விதமாக ஹெலிகாப்டர் உதவியை அவர்கள் நாடிச்செல்லும் வரை தேடுதல் வேட்டையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

ஒருவழியாகக் கடந்த வெள்ளியன்று தனக்கு மேலே வானத்தில் ஹெலிகாப்டர் இறக்கைகள் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்ட போது லிலியன் எழுந்து கொள்ள முடியாத அளவுக்கு உடல் மிக மிகச் சோர்வான நிலைக்குத் தள்ளப்பட்டு ஓய்ந்து போயிருந்தார். இருப்பினும் தாம் உயிருடன் தப்பிச் செல்ல கிடைத்த ஒரே மார்க்கம் இது என்பதால் கஷ்டப்பட்டு வெகு பிரயத்தனத்த்துடன் காரில் இருந்து இறங்கி அவர் கையசைக்கவே ஹெலிகாப்டரில் இருந்த காவலர்கள் லிலியனின் இருப்பைக் கண்டறிந்தனர் எனத் தகவல்.

காவலர்களைக் கண்ட மாத்திரத்தில் ஓடி வந்த லிலியன் அவர்களிடம் என்ன கேட்டார் என்று தெரியுமா?

எனக்கு உடனடியாக அருந்துவதற்கு கொஞ்சம் தண்ணீரும், புகைப்பதற்கு ஒரு சிகரெட்டும் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.

லிலியனின் நல்லகாலமோ என்னவோ அந்த நேரத்திலும் ஒரு காவலரிடம் சிகரெட் இருந்திருக்கிறது. வாங்கிப் பற்ற வைத்து தனது பயத்திற்கும், உடல் உபாதைகளுக்கும் சற்றே நிவாரணம் தேடிக் கொண்டிருக்கிறார் லிலியன்.

இப்போது பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் லிலியன் ஆஸ்திரேலிய மருத்துவமனை ஒன்றில் நீரிழப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 நாட்கள். உண்பதற்கு எதுவுமே இல்லை. இருந்தெல்லாம் ஒரே ஒரு ஒயின் பாட்டிலும், இரண்டு ஸ்வீட் கேண்டிகளும் மட்டுமே. அதை வைத்து எப்படியோ சமாளித்து ஒருவழியாக உயிர் தப்பி விட்டார். ஆனாலும் மரண பயத்தில் இருந்து விடுபட இன்னும் சற்று கால அவகாசம் தேவைப்படலாம்.

ஆஸ்திரேலியாவின் நியூஸ் 9 சேனலுக்கு அவரளித்த பேட்டியில்; கடந்த வெள்ளியன்று நான் இறந்து விடுவேன் என்றே நம்பத் தொடங்கி இருந்தேன் . என்னைக் கண்டுபிடித்த காவல்துறைஅதிகாரிகளுக்கு நான் என்றென்றைக்குமாக நன்றிக்கடன் பட்டவளாக இருக்க விரும்புகிறேன் எனத்தெரிவித்திருக்கிறார்.

லிலியனுக்கு மேலும் சில உடல் உபாதைகளும் இருந்த நிலையில், அவர் இவ்வளவு நாட்கள் தாக்குப் பிடித்ததே ஆச்சர்யம் என்கிறார்கள் காவலர்கள்.

தேடுதல் குறித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள், “லிலியன் 5 நாட்களும் வேறு எங்கும் நடந்து சென்று அடுத்தகட்ட உதவியைப் பெற முயற்சிக்காமல் காருக்குள்ளேயே பாதுகாப்பாக அமர்ந்திருக்க நினைத்தது எங்களைப் பொருத்தவரை வேலையை எளிதாக்கி இருக்கிறது. அவரது அந்த முடிவால் தான் உயரமான ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு கீழே புதர்களுக்கு மத்தியில் இருந்த காரை எங்களால் கண்டறிய முடிந்தது . ஆக லிலியனைப் பொருத்தவரை இது புத்திசாலித்தனமான முடிவு. இதற்காக நாங்கள் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்” எனக் கூறினர்.

மேற்கண்ட நிகழ்வில் நாம் தெளிவாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டியது இரண்டு விஷயங்களை. அவை, நமது வாழ்க்கை முறைக்கும் மிகப் பொருத்தமாகவே இருக்கக் கூடும்.

இங்கு வார இறுதி விடுமுறையைக் கழிக்க ஒரு 48 வயதுப் பெண்மணி தன்னந்தனியே டூர் கிளம்பி இருக்கிறார். இது அங்கு அன்யூசுவல் இல்லை. வழக்கமாக நிகழக்கூடியதே. ஆயினும் அவர், எந்த வேலையில் பிஸியாக இருந்த போதிலும் தினமும் ஒருமுறை தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் என்பது ஆரோக்யமான விஷயம் எனலாம். ஒருவேளை அதைச் செய்யத் தவறி இருந்தால் தேடுவார் இன்றி இன்று அவர் ஒருவேளை மரணத்தைச் சந்திக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆக லிலியன் அந்த விஷயத்தில் அதிருஷ்டசாலியாகவே இருக்கிறார்.

அடுத்தது, தன்னந்தனியாக அடர் புதர்களுக்குள் வனப்பகுதியில் சிக்கிக் கொண்டதால் பயத்தில் அங்கும், இங்குமாக அலறி ஓடி பாதைகளை தேடும் முயற்சியில் இறங்கி இருந்தால் ஹெலிகாப்டர் தேடுதல் வேட்டையில் கார் மட்டுமே சிக்கி இருக்கக் கூடும். லிலியன் மீண்டும் காட்டுக்குள் வழி தப்பிப்போய் எங்கேனும் மீட்க முடியாத இடத்தில் சிக்கிக் கொண்டிருக்கவும் வாய்ப்புகள் அதிகமுண்டு.

ஆக இந்த இரண்டு முக்கியமான விஷயங்களை இந்த உண்மைச் சம்பவத்தில் இருந்து நாம் கற்றுக் கொண்டாக வேண்டும்.

ஆம், எக்காலத்திலும், எச்சூழலிலும் குடும்பத்தினருடன் தொடர் இணைப்பும், சமயோஜித புத்தியும் மிக அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com