ரஷ்யாவை தாக்க அமெரிக்கா அனுப்பிய கொத்துக் குண்டுகள் உக்ரைன் சென்றடைந்தது!

ரஷ்யாவை தாக்க அமெரிக்கா அனுப்பிய கொத்துக் குண்டுகள் உக்ரைன் சென்றடைந்தது!

க்கிரமிப்பு ரஷ்ய இராணுவத்துக்கு எதிராகப் போரிடுவதற்காக அமெரிக்கா அளித்துள்ள பேரபாயம் தரும் கொத்துக்குண்டுகள் (cluster Bomb)உக்ரைன் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.

உக்ரைன் இராணுவத்தின் தென்பகுதியான தவ்ரியாவின் செய்தித்தொடர்பாளர் வாலரி செர்சன் நேற்று அதிகாரபூர்வமாக இதை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து பேசிய வாலரி செர்சன்,“ உக்ரைனுக்கு 80 கோடி டாலர் இராணுவ உதவித் தொகுப்பை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அதில் பேரபாயம் வாய்ந்த கொத்துக்குண்டு ஆயுதங்களும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதையடுத்த ஒரு வாரத்தில், அமெரிக்கா அனுப்பிய இராணுவத் தளவாடங்கள் உக்ரைனுக்கு வந்துசேர்ந்தன என்று தவ்ரியா பகுதியின் கட்டளைத் தளபதி உள்ள வாலரி ஊடகங்களிடம் கூறினார்.

மேலும் பேரபாயத்தை ஏற்படுத்தும் கொத்துக்குண்டுகள் (cluster Bomb) தங்களின் ஆயுதத் தளவாடங்கள் மூலம் உக்ரைனை அடைந்துவிட்டன என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகள் கொண்டுவரப்பட்டு இருப்பதற்கு ரஷ்யா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு வியாழன் அன்று இதுகுறித்துப் பேசுகையில், உக்ரைன் இந்தவகை ஆயுதங்களைப் பயன்படுத்தினால் தாங்களும் அதே பாணியில் இறங்க வேண்டி இருக்கும் என்று கூறினார். ஆனால், உக்ரைன் தரப்போ தங்கள் நாட்டின் நீண்ட பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவது சரிதான் என நியாயப்படுத்தியுள்ளது.

ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பு முனைப்பை இது மேற்கொண்டு தடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் இப்போதைய நிலவரத்தின் அடிப்படையையே மாற்றி உக்ரைன் படைகளுக்கு சாதகமானபடியாக அமைக்கும் என்றும் அமெரிக்கா ஆதரவில் இயக்கப்படும் ரேடியோ லிபர்ட்டி வானொலிப் பேட்டியில் தவ்ரியா செய்தித் தொடர்பாளர் செர்சன் விளக்கம் அளித்தார்.

நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள கொத்துக்குண்டுகளை, ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளுமே தடை விதிக்கவில்லை. இந்நிலையில், சட்ட வரம்புக்கு உட்பட்டு கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தப் போவதாகக் கூறும் செர்சன், ரஷ்ய நாட்டுப் பகுதிக்குள் இவை பயன்படுத்தப்படாது என்றும் ரஷ்யப் படைகள் குவிந்து காணப்படும் இடங்களில் மட்டும் கொத்து குண்டுகளை பயன்படுத்தி ரஷ்ய ராணுவத்தினரை ஓடச்செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

கடந்த புதன் அன்று நேட்டோ மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, கொத்துக்குண்டுகளின் பயன்பாடு குறித்து மீண்டும் வாக்குறுதி அளித்தார். ஆனாலும் இதுவரை இரண்டு நாடுகளுமே கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்துவதாக எதிர்த்தரப்பின் மீது குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com