டாலருக்கு மாற்றாக யுவான்: தென் அமெரிக்காவில் அதிகரிக்கும் மாற்றம்!

டாலர் யுவான்
டாலர் யுவான்

தென் அமெரிக்க நாடுகளில் வர்த்தக மாற்றுச் செலாவணியாக டாலருக்குப் பதிலாக சீனாவின் யுவானைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த வட்டாரத்தில் மூன்றாவது நாடாக பொலிவியாவில் யுவானைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

உலகின் முன்னணி வர்த்தகப் பயன்பாட்டு நாணயமாக அமெரிக்க டாலர் இருந்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளில் யூரோ முதன்மையாகப் பயன்படுத்தப் படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே டாலரின் மதிப்பு உலக அளவில் சீரானதாக இல்லை. உலகின் பிரபல தி எகனாமிஸ்ட் இதழ் அண்மையில், டாலரின் வருங்காலம் எனும் தலைப்பில் முக்கியமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

ஜோ பைடன் அரசாங்கமும் டாலரின் மதிப்பைத் தக்கவைக்க பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டில் ஏற்பட்ட பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்நாட்டின் மத்திய வங்கியிடம் பல முறை கெடு தேதிகளை பைடன் அரசு வாங்கியபடி இருக்கிறது. குறிப்பாக, வட்டிவீதத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்குள் பைடன் நிர்வாகம் படாதபாடு பட்டு வருகிறது என்பது தெரிந்ததே! கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, நிலைமை சீராகிவிடும் என பொருளியல் வல்லுநர்கள் கூறிவந்த போதும், நடப்பில் ஒன்றும் நிகழவில்லை.

இதனிடையே, அமெரிக்க நாட்டின் அருகில் உள்ள தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில், வர்த்தகப் பரிமாற்ற நாணயமாக டாலருக்குப் பதிலாக வேற்று நாணயத்தைப் பயன்படுத்த யோசித்தன. இந்த சமயத்தில், ஏற்கெனவே அமெரிக்காவின் தொழில் துறையில் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ள சீனா, தென் அமெரிக்காவிலும் தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தியது.

அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா என சீனாவின் வர்த்தகக் கூட்டாளி நாடுகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் முதலில் அர்ஜென்டினா யுவான் நாணயத்தை தன் இறக்குமதிகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் அந்நியச் செலாவணியை யுவானில் சேமித்து வைக்கவும் முடிவுசெய்தது. மேலும், சர்வதேச நிதியத்துக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையையும் யுவானில் செலுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.

அடுத்ததாக, பிரேசில் அரசாங்கம் யுவான் பயன்பாட்டில் இறங்கியது. முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயத்தின் மூலமே இந்த நாடு தன்னுடைய வர்த்தகப் பரிமாற்றத்தை மேற்கொண்டுவந்தது. யூரோவைத்தான் இரண்டாவது அந்நியச் செலாவணியாக அது வைத்திருந்தது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, பிரேசிலின் அந்நியச் செலாவணியில் 5.37 சதவீதம் சீனாவின் யுவான் நாணயமே இருந்துள்ளது. யூரோவின் அளவோ அதைவிடக் குறைவாக, 4.74 சதவீதம் என்கிற அளவில் இருந்தது.

பல மாதங்களாக நிலவிய கடுமையான டாலர் பற்றாக்குறையைத் தொடர்ந்து, பொலிவியா நாடும் கடந்த பிப்ரவரியில் யுவானைப் பயன்படுத்தத் தொடங்கியது. எதிர்க்கட்சியினரும் சில ஆய்வாளர்களும் இதுகுறித்து கேள்விகளை எழுப்பினார்கள். இது நீண்ட காலத் தீர்வு அல்ல; பொருளாதாரச் சிக்கல்களை மறைப்பதற்காக இப்படி செய்யப்படுகிறது என்கிறார், பொலிவியா கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஜோஸ் கேப்ரியேல் எஸ்பினோசா.

ஆனால், இந்த விமர்சனங்களையும் ஒதுக்கித் தள்ளுகிறார்கள், வர்த்தக தொழில் துறையினர். யுவானைப் பயன்படுத்துவது வர்த்தகம் செய்யவேண்டியதற்கான ஒரு மாற்று என்கிறார், பொலிவியா நாட்டின் ஏற்றுமதியாளர் சபை மேலாளர் மார்செலோ ஒலுகின்.அரசியல் மாறுபாடுகள் ஒரு பக்கம் இருக்க. அமெரிக்க டாலருக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது; வட்டிவீதங்களும் அதிகரித்து விட்டன; இதனால் பொருளாதாரத்தை கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது என்று ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார், போஸ்டன் பல்கலைக்கழக முதுநிலை கல்விப்புல ஆராய்ச்சியாளர் ரெபக்கா ராய்.

”எல்லா நாடுகளிலும் பெரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். அமெரிக்க டாலர் என்பது முக்கியமான ஒன்று. அதை வாங்குவதும் வைத்திருப்பதும் அதிக விலை பிடிக்கக்கூடியதாக இருக்கிறது. இதனால், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் உள்ள மைய வங்கிகளில் டாலரின் இருப்பு குறைவாக இருக்கிறது. எனவே, அவை மாற்று நாணயத்தை எதிர்நோக்கியபடி உள்ளன.” என்பது ரெபக்காவின் கருத்து. முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில், பொலிவியா அதிபர் லூயிஸ் அர்ஸ், டாலர் கையிருப்பு நெருக்கடியில் நாடு மாற்று ஒன்றைத் தேடிக்கொண்டு இருக்கிறது என்று கூறியிருந்தது, கவனத்துக்கு உரியது.

கடந்த ஏப்ரலில், சீனாவுக்குப் பயணம் செய்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதன் தங்கத் தரம் என்பது மறைந்துபோன பிறகும், அதுதான் வர்த்தக மாற்று என யார் தீர்மானிப்பது என்றும் அவர் கேட்டிருந்தார்.

தொழில் துறைகளில் வட அமெரிக்காவில் பெரும் இடத்தை சீனா எப்போதோ பிடித்துவிட்டபோதும், டாலரின் நாணயமாற்றை அதனால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தது. இப்போது மெல்ல மெல்ல அந்த நிலைமை மாறிவருகிறது. அதுவும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அருகில் உள்ள தென் அமெரிக்கக் கண்ட நாடுகளிலேயே யுவானின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றிருப்பது, டாலருக்கான சரியான போட்டியாக அமைந்துள்ளது.  சீனாவின் பாணியிலேயே, ரஷ்யாவின் ரூபிளும் இந்தியாவின் ரூபாயும் வர்த்தக மாற்று நாணயமாக அண்மையில் பல நாடுகளில் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com