

பீகாரின் கிழக்கு சம்பரான்(East Champaran) என்ற மாவட்டத்தில் உலகின் உயரமான சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள விராட் ராமாயண கோவிலில் 33 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம், 350 டன் ஒற்றை கிரானைட் கல்லில் வடிவமைக்கப்பட்டு தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படுகிறது. மகாபலிபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் சேதுபதி மற்றும் அவரது குழுவினர் இந்த சிவலிங்கத்தில் 1008 சிறிய சிவலிங்கங்களை செதுக்கியுள்ளனர். 210 டன் எடை கொண்ட இந்த லிங்கம், 2,100 கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு பீகாரை சென்றடைய உள்ளது.
பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளையால் கட்டப்படும் விராட் ராமாயண கோவில் 1,080 அடி நீளமும், 540 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இதில் 22 சன்னதிகள், 18 கோபுரங்கள் மற்றும் 270 அடி உயர பிரதான கோபுரம் இருக்கும். ராமாயண காவியத்தை சித்தரிக்கும் காட்சிகள் சன்னதியின் சுவர்களில் பொறிக்கப்படும். கணேஷ் ஸ்தல், சிங் த்வார், நந்தி என அழைக்கப்படும் கோவிலின் நுழைவாயில்கள் மற்றும் கருவறை தூண் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்போது பிரம்மாண்டமான இந்த சிவலிங்கம் நிறுவப்பட்டதன் மூலம் பிரதான கோயிலின் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரத்தில் சுமார் 10 ஆண்டுகள் உழைப்பில் செதுக்கப்பட்ட இந்த சிவலிங்கம், கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள சாக்கியா-கேசரியா சாலையில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண கோவிலின் மையப் பகுதியாக இருக்கும். இந்த பிரம்மாண்டமான லிங்கம், தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு டிரெய்லரில் அதாவது 96 சக்கர ஹைட்ராலிக் டிரெய்லரில் பொறியியல் குழுவின் மேற்பார்வையின் கீழ் இயக்கப்பட்டு, இதன் முழு பயணமும் 20-25 நாட்கள் வரை ஆனது. இது சாலை வழியாக சுமார் 2,100 கிலோமீட்டர் தூரம் பீஹாருக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் மதிப்பிடப்பட்ட செலவு தோராயமாக 3 கோடி ரூபாயாகும்.
சிவலிங்கத்தின் பிராண பிரதிஷ்டை ஒரு சிறப்பு மங்களகரமான நேரத்தில் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோவிலில் உள்ள சிவலிங்கம் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பிற உலக சாதனைப் புத்தகங்களில் உலகின் மிக உயரமான சிவலிங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பீகாரில் நிறுவப்பட உள்ள இந்த ஒற்றைக்கல் கிரானைட்டில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கம் என்ற பெருமையைப் பெறும்.