‘உலகின் அழகற்ற நாய்’ போட்டி! ஏன் கொண்டாடப்பட்டது தெரியுமா?

‘உலகின் அழகற்ற நாய்’ போட்டி! ஏன் கொண்டாடப்பட்டது தெரியுமா?

அழகைக் கொண்டாட பலகோடிப் பேர்கள் இருந்தால் அழகற்ற நிலையைக் கொண்டாட சில நூறு மனிதர்களாவது இருப்பார்கள். இயற்கையில் இறைவன் படைப்பில் அழகற்ற நிலை என்று எதுவும் இல்லை. எல்லாம் பார்ப்பவர்களது கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது.

பார்க்கும் புறக்கண்களுக்கும், அகக்கண்களுக்கும் ஒரு விஷயம் அழகென்றால்; அது அழகு! அவ்வளவு தான். ஆக, அழகு என்பது பொருளில் இல்லை நமது கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. இதை மெய்பிப்பது போல ‘உலகின் அழகற்ற நாய்’களுக்கான போட்டியானது சமீபத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளச் செய்யப்பட்ட நாய்கள் அனைத்தும் மோசமான எஜமானர்களின் தாக்குதலுக்கு உட்பட்டும், சாலை விபத்தில் உறுப்புகளை இழந்த நிலையிலும், வளர்ப்பு நாய் கூடாரங்களில் இருந்தும், தெருநாய்களுக்கான உறைவிடங்களில் இருந்தும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்படந்து நல் உள்ளம் படைத்தவர்களால் காப்பாற்றப்பட்டவையே!

இந்த ஆண்டுக்கான 'Sonoma - Marin World’s Ugliest Dog' போட்டியில் வெற்றிவாகை சூடி முதல் பரிசை வென்றிருப்பது ஸ்கூட்டர் ட்ரும்ஃபெட் எனும் 7 வயது நாய்.இந்த நாய்க்கு பிறக்கும் போதே பின்னங்கால்கள் சிதைந்திருந்த காரணத்தால் இதன் தோற்றம் பிற சாதாரண நாய்களைப் போல அன்றி வித்தியாசமானதாக இருந்தது.

அழகான நாய்களை யார் வேண்டுமானாலும் வேண்டி விரும்பி வளர்ப்பு நாயாகத் தத்தெடுத்து வளர்ப்பார்கள். ஆனால், அழகற்ற நாய்களுக்கும் இந்த உலகம் சொந்தமானது என்பதோடு இங்குள்ள மனிதர்களும் சொந்தமானவர்களே என்பதை உணர்த்தவே 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த விழா ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படுகிறது! இதன் மூலமாக நாய்களின் மீது அக்கறை கொண்டு கைவிடப்பட்ட நாய்களை வளர்க்கும் ஆர்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதோடு மனிதர்களின் மிகச்சிறந்த நண்பனான நாய் வளர்ப்பையும் ஊக்குவிக்க முடிகிறது என்கிறார் போட்டியை நடத்தும் நிறுவனத்தின் சிஇஓ டானி டெஸ்கோனி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com