மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்புத் தேர்தல்: பிரிஜ்பூஷன் குடும்பத்தினர் போட்டியில்லை!

மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்புத் தேர்தல்: பிரிஜ்பூஷன் குடும்பத்தினர் போட்டியில்லை!

மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷன் சரண் சிங் குடும்பத்தினர் எவரும் தகுதி இருந்த போதிலும் போட்டியிடமாட்டார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்புக்கான தலைவர், மூத்த துணைத் தலைவர், 4 துணைத் தலைவர்கள. பொதுச்செயலாளர், பொருளாளர், 2 இணை செயலாளர்கள், 5 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தலைவர் பதவியிலிருந்து வெளியேறும் பிரிஜ் பூஷன் சரண்சிங் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் எவரும் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் அனுராக் தாகுர் உறுதியளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிரிஜ் பூஷன் மீது இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதை அடுத்து மல்யுத்த வீர்ர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை நிறுத்திவைத்துள்ளனர்.

பிரிஜ்பூஷன் மகன் கரண் பூஷன் உத்தரப்பிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராகவும், அவரது மருமகன் ஆதித்ய பிரதாப் சிங் பிகார் சங்கத்தின் தலைவராகவும் உள்ளனர். தற்போதைய சூழலில் தேர்தலில் போட்டியிட்டு பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. எனினும் அவர்கள் தேர்தலில் கலந்துகொண்டு தங்கள் வாக்குகளை செலுத்த முடிவு செய்துள்ளனர்.

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் 12 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதால் பிரிஜ் பூஷன் இனி தேர்தலில் முடியாது என்று சொல்லபடுகிறது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்பட வேண்டும். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மல்யுத்த வீர்ர்கள், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் மீது தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

இதைத்தொடரந்து ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாகவும் அறிவித்தனர். பின்னர் விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகைக் விடுத்த வேண்டுகோளை ஏற்று அந்த முயற்சியை அவர்கள் கைவிட்டனர்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை போராட்டக்குழுவினர் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை அழைத்து மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜூன் 15-ஆம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் உறுதி தெரிவித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர்.

மொத்தம் 25 மாநிலங்களில் செயல்படும் மல்யுத்த வீர்ர்கள் சங்கத்தினர் இந்த தேர்தலில் போட்டியிடலாம். ஒவ்வொரு சங்கம் சார்பிலும் இரண்டு பேர் போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிடுவோர் தங்களது பெயரை இந்த மாதம் 19 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். வேட்புமனுக்களை ஜூன் 23 முதல் 25 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். 28 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுவை ஜூலை 1 ஆம் தேதிக்குள் வாபஸ் பெறலாம்.

இறுதி வேட்பாளர் பட்டியல் ஜூலை 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com