மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!

மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!

மல்யுத்த வீரர்கள் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு வருகிற ஜூன் 15 க்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்ததை ஒட்டி மல்யுத்த வீரர்கள் குழு தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக நேற்று அறிவித்தது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த மல்யுத்த வீரர்களின் போராட்டமானது தங்களுக்கு உரிய நீதி கிடைக்காத காரணத்தால் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நடைபெற்ற நாளில் அதன் உச்சத்தைத் தொட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் தங்களுக்கான நீதி கேட்டு போராடிய மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்டு விழா நடக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தக் காட்சிகளை காணொளியாக கண்டவர்கள் மத்திய அரசின் உத்தரவின் பேரில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல்துறையினர் மீதும், மத்திய அரசின் மீதும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். அது மட்டுமல்ல மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஜூன் 9 க்குள் நீதி கிடைக்காவிட்டால் அவர்களுடன் இணைந்து இந்திய விவசாய சங்கமும் போராட்டத்தில் இறங்கும் எனவும் அற்விப்பு வெளியாகி இருந்தது.

தேசத்திற்காக உலக அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் முதல் வெண்கலம் வரை பதக்கங்களைப் பெற்றுத்தந்த திறன் மிகுந்த வீரங்கனைகளும், வீரர்களும் தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைத் தட்டிக் கேட்டு தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்க மத்திய அரசு அவர்களுக்கு காது கொடுக்காமல் இருந்த காட்சி நாடு முழுவதும் பல்வேறு விதமாக அதிருப்தியைக் கிளறி விட்டது.

இந்நிலையில் நேற்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பின் பேரில் அவரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு மல்யுத்த வீரர்களின் போராட்டமானது ஒருவழியாகத் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமைச்சருடனான பேச்சு வார்த்தையின் போது , வீரர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு திறந்த மனதுடன் அணுகும் என அவர் உறுதி அளித்திருந்தார். அத்துடன் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா அன்று நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர், அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஜூன் 15 க்குள் பிரிஜ் பூஷன் மீதான

குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு மல்யுத்த வீரங்கனைகள் சுமத்திய குற்றங்கள் உறுதியாகும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல ஜூன் 30 க்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவிக்கு தேர்தல்நடத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக போராட்ட வீரர்களுக்குத் தலைமை தாங்கியவர்களுள் ஒருவரான பிரபல மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, தலைவர் பதவிக்கு பிரிஜ் பூஷன் குடும்பத்தில் இருந்து வேறு எவரும் போட்டியிடக்கூடாது என்பதும் தங்களது நிபந்தனைகளுள் ஒன்று என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜூன் 15 க்குள் இந்த போராட்டம் தொடர்பான அனைத்து காவல்துறை விசாரணைகளும் முடிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த உறுதிமொழி தவறினால் மீண்டும் தங்களது போராட்டம் தொடரும் என்றும் பஜ்ரங் புனியா தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மல்யுத்த வீரர்களின் நிபந்தனைகளை மத்திய அரசு திறந்த மனதுடன் அணுகும் எனவும், மல்யுத்த வீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய உள்மட்ட அளவில் புகார்க்குழு அமைக்கப்படும் எனவும் உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

அந்தக் குழுவுக்கு பெண் ஒருவர் தலைமை வகிக்க வேண்டுமென்பது மல்யுத்த வீரங்கனைகளின் வேண்டுகோள். மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்ற்கொண்டதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், நேற்று போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com