மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கங்களை வீசுவது நிறுத்தம்: மத்திய அரசுக்கு 5 நாட்கள் அவகாசம்!

மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கங்களை வீசுவது நிறுத்தம்:  மத்திய அரசுக்கு 5 நாட்கள் அவகாசம்!

இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் தீவிரமடைந்தது. பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தாங்கள் வென்ற பதக்கங்களையே கங்கையில் வீச உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து 5 நாட்களுக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் இன்று மாலையில் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் வந்து சேர்ந்தனர். சாக்சி மாலிக், வினேக் போகத், பஜ்ரங் புனியா மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் அங்கு வந்து சேர்ந்தனர்.

ஆற்றங்கரையில் மனமுடைந்து தரையில் அமர்ந்தனர். அப்போது சிலர் வேதனை தாங்காமல் அழுதுவிட்டனர். அவர்களை சக வீரர், வீராங்கனைகள் தேற்றினர். உள்ளூர் மக்களும் அங்கு வந்து ஆறுதல் கூறினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியுள்ளது.

பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக் கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித், இன்று பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதற்காக இறுதி அவகாசம் கொடுக்கலாம் என்றும் கூறி உள்ளார். இதனால் கடைசி நேரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர்.

அப்போது டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த ராகேஷ் டிக்கைட்டும் கிசான் அமைப்பின் தலைவருமான நரேஷ் திகாயித், மல்யுத்த வீரர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஹர்-கி-பௌரிக்கு வந்தவர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்டு , 5 நாட்கள் தங்களுக்கு அவகாசம் தரும்படி கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர். 5 நாட்களுக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இன்று பிற்பகல் முதல் மாலை வரை நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com