இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தல் நிறுத்திவைப்பு!

இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தல் நிறுத்திவைப்பு!
Published on

ந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலை நிறுத்திவைத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஹரியானா மல்யுத்த வீரர்கள் சங்கம் வழக்கு தொடுத்துள்ளதை அடுத்து, இந்தத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் ஹரியானா அமெச்சூர் மல்யுத்த வீரர்கள் சங்கம் வாக்களிக்க அனுமதி அளித்த முடிவை எதிர்த்து ஹரியானா மல்யுத்த வீரர்கள் சங்கம் வழக்கு தொடுத்ததை அடுத்து, வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை இந்தத் தேர்தலை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் எஸ்.பரத்வாஜ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

‘ஹரியானா மல்யுத்த சங்கத்தின் நிர்வாகக்குழு அதிகாரம் எங்களுக்குத்தான்’ என இரண்டு குழுக்கள் உரிமை கோருகின்றன. இந்திய மல்யுத்த சம்மேளன விதிகளின்படியும், சட்டப்படியும் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இரண்டு பிரதிநிதிகளை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கலாம்.

காங்கிரஸ் கட்சி எம்பி தீபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஹரியானா மல்யுத்த வீரர்கள் சங்கம், ‘இந்தியாவில் மல்யுத்தத்துக்கான முதன்மையான நிர்வாக அமைப்பான இந்திய மல்யுத்த சம்மேளனத்துடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட அமைப்பு நாங்கள்தான்’ என்று கூறுகிறது.

மற்றொரு அமைப்பான ஹரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் ஹரியானா ஒலிம்பிக் சங்கம் ஆகிய இரண்டுடன் தாங்கள் இணைந்திருப்பதாகக் கூறுகிறது. ஆனால், ஹரியானா ஒலிம்பிக் சங்கம் தரப்பில் ‘ஹரியானா அமெச்சூர் மல்யுத்த வீரர்கள் சங்கம் எங்களுடன் இணைந்த அமைப்பு அல்ல’ என்று கூறுகிறது.

‘ஹரியானா மல்யுத்த வீரர்கள் சங்கம் இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்துடன் இணையவில்லை. எனவே, அந்த சங்கம் தேர்தலில் பங்கேற்பது சட்டவிரோதம்’ என்று ஹரியானா அமெச்சூர் மல்யுத்த வீரர்கள் சங்கம் கூறுகிறது. ஆனால், தேர்தல் அதிகாரி ஹரியானா அமெச்சூர் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் தேர்தலில் பங்கேற்க அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ‘ஹரியானா அமெச்சூர் மல்யுத்த வீரர்கள் சங்கம் இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்துடன் இணைந்திருக்கலாம். ஆனால், ஹரியானா ஒலிம்பிக் சங்கத்துடன் இணையவில்லை. எனவே, தேர்தல் நடைமுறைகளில் அந்த சங்கம் பங்கேற்க முடியாது’ என்று ஹரியானா மல்யுத்த வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்த ரவீந்தர் மாலிக் தெரிவித்தார்.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் வழக்கு உள்ளதால் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும், அவர் அதிகபட்சம் 12 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளதால் மீண்டும் தலைவராகப் போட்டியிட முடியாது.

முன்னதாக, இந்தத் தேர்தல் சென்ற ஜூலை மாதம் 6ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஹரியானா மாநிலத்தில் உள்ள சில அமைப்புகள் தங்களை விலக்கி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஜூலை மாதம் 11ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, அஸ்ஸாம் மல்யுத்த வீரர்கள் சங்கம் நீதிமன்றத்தில் தடை வாங்கியதையடுத்து இந்தத் தேர்தல் நடைபெறவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12ல் இந்தத் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இந்த நிலையில், இப்போது பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம் தேர்தலை நிறுத்திவைத்து உத்தரவிட்டு இருக்கிறது.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலில் 15 இடங்களுக்கு 24 பேர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு 2010 ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனிதா ஷெரோன் மற்றும் பிரிஜ் பூஷன் ஆதரவாளரும் உ.பி. மல்யுத்த வீரர்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான சஞ்சய் சிங் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். அனிதா ஷெரோனுக்கு பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினீஷ் போகத் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com