பீகார் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ‘மாநிலத்தின் திருத்தப்பட்ட இடஒதுக்கீடு சட்டங்களை அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அப்போது நிதிஷ்குமார் அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, ‘பாட்னா உயர் நீதிமன்றம் அதைத் தள்ளிவைத்த பிறகு, உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட விஷயத்தை பேரவையில் விளக்கினார். ஆனாலும், பீகாரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் இட ஒதுக்கீட்டில் நிதிஷ்குமார் அரசின் தோல்வி குறித்து, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து நிதிஷ்குமாருக்கு எதிரான முழுக்கங்களை எழுப்பின.
இதனால் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட முதலமைச்சர் நிதிஷ்குமார் மிகவும் ஆக்ரோஷமாக, ஆர்ஜேடி கட்சியின் பெண் எம்எல்ஏ ரேகா தேவியை நோக்கி, “நீங்கள் ஒரு பெண்.உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறினார்.
தொடர்ந்து, முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்ததால் அவர் மிகவும் ஆவேசமடைந்தார். அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முதலமைச்சருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி சட்டசபையில் அமளியில் ஈடுபட்டன. அந்த அமளிலும் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது உரையில், “சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்காக தனது அரசாங்கம் நிறைய செய்துள்ளது” என்று கூறினார்.
அவையில் சலசலப்பு குறையாததால் சபாநாயகர், “சட்டசபையை நடத்தவிடக் கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் நோக்கமாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு முதலமைச்சர் அளித்த விளக்கம் பலன் தரவில்லை. எனவே அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்கிறேன்” என்று கூறி அவையை ஒத்திவைத்தார்.
முதலமைச்சர் நிதிஷ்குமாரின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து எம்எல்ஏ ரேகா தேவி கூறும்போது, “என்னை மட்டுமல்ல, ஒவ்வொரு தலித் பெண்ணையும் அவர் இதன் மூலம் அவமதித்துள்ளார். முதல்வரின் பேச்சு என்னை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வயதாகி விட்டதால் அவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். கடந்த கூட்டத் தொடரிலும் அவர் இதேபோன்று ஒரு பெண் எம்எல்ஏவிடம் மரியாதைக் குறைவாக ஏதோ ஒன்றைக் கூறி, அந்தப் பெண் எம்எல்ஏவை அழ வைத்தார்.
முதல்வரின் இந்தப் பேச்சால் நான் மிகவும் மனம் புண்பட்டுள்ளேன். அவர் தனது இந்தப் பேச்சுக்காக அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.