காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் முயற்சியாக ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை, தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து டிச. 24 இல் தில்லியை சென்றடைந்தது.
இந்த யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தில்லியில் 9 நாள் ஓய்வுக்குப் பிறகு ராகுலின் யாத்திரை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தில்லியில் யமுனா பஜாரில் உள்ள ஹனுமன் ஆலயத்தில் வழிபட்ட பின் ராகுல் யாத்திரையை தொடர்ந்தார்.
உத்தரப் பிரதேச மாநில எல்லையில் ராகுலின் யாத்திரை வரவேற்று பேசிய காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, “ எனது சகோதரர் ஒரு போராளி. அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். கெளதம் அதானி, அம்பானி சில தலைவர்களையும் ஊடகங்களையும் விலைக்கு வாங்கியிருக்கலாம். ஆனால், அவர்களால் எனது சகோதரரை விலைக்கு வாங்க முடியாது என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் ராம மந்திர் டிரஸ்ட் செயலாளர் சம்பத் ராயும் ராகுலின் யாத்திரைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
"இளம் வயத்தில் நீங்கள் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளீர்கள். உங்களது முயற்சிக்கு நன்றி. கடுமையான குளிரிலும் யாத்திரை செல்லும் உங்களை பாராட்டத்தான் வேண்டும். மக்கள் நலனுக்காகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் நீங்கள் நடத்தும் யாத்திரை வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
நான் ஆர்.எஸ்.எஸ். தொண்டன். ஆனாலும் உங்கள் யாத்திரைக்கு கண்டனம் தெரிவிக்க மாட்டேன். ஒவ்வொருவரும் இதுபோல் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் அயோத்தி ஸ்ரீராமர் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர ஜெயின், ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.
நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும் உங்கள் முயற்சிக்கு என்னுடைய ஆதரவு மட்டுமல்ல பகவான் ஸ்ரீராமரின் ஆசியும் உண்டு என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.