ஃப்ளோரிடாவில் இளம்பெண்ணின் சாகஸம் – ஜிம்மில் மானபங்கம் செய்ய முயன்றவனை அடித்து விரட்டிய தீரம்!

ஃப்ளோரிடாவில் இளம்பெண்ணின் சாகஸம் – ஜிம்மில் மானபங்கம் செய்ய முயன்றவனை அடித்து விரட்டிய தீரம்!

ஃப்ளோரிடாவில் நசாலி அல்மா எனும் 24 வயது இளம்பெண் ஒருவர் அவரது அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென உள்ளே நுழைந்த இளைஞன் ஒருவன் அவரை மானபங்கம் செய்ய முயன்றிருக்கிறார். போலீஸ் ரிகார்டுகளின் படி அவனது பெயர் சேவியர் தாமஸ் என்று தெரிய வந்திருக்கிறது.

பாடி பில்டரான அல்மா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அந்த இளைஞனின் பிடியில் சிக்காமல் தப்ப அவர் வெகுவாக முயன்றிருக்கிறார். நசாலியின் முயற்சிகளைக் கண்டு அசராமல் மீண்டும் அந்தப் பெண்ணை கெட்ட எண்ணத்தில் தொட முயன்று நெருங்கி இருக்கிறான் அந்த இளைஞன்.

அவனிடம் இருந்த தப்பிக்க ஜிம் முழுக்க ஓடியிருக்கிறார் நசாலி அல்மா. கடைசியில் ஒருவழியாக கடுமையான போராட்டத்தின் பின் நசாலியின் எதிர்த் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் பின்வாங்க வேண்டியதாகி இருக்கிறது. களைத்துப் போய் கீழே விழுந்தவனை போலீஸ் அள்ளிச் சென்று கிட்னாப்பிங் மற்றும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற வகையின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

அந்த இளைஞனை அல்மா வசிக்கும் அதே அபார்ட்மெண்டிலும், ஜிம்மிலும் இதற்கு முன்பு பலமுறை பார்த்த ஞாபகமிருக்கிறது எனத்தெரிவித்திருக்கிறார் நசாலி அல்மா. அவன் அதே அபார்ட்மெண்ட்டில் அன்றைய தினமே இதே போல மற்றொரு நடவடிக்கையிலும் ஈடுபட முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அன்று காலை , 25 வயது சேவியர் தாமஸ், அதே அபார்ட்மெண்டின் முதல் மாடியில் இருக்கும் வீடு ஒன்றின் கதவைத்தட்டி உள்ளே நுழைய முயற்சித்திருக்கின்றான். ஆனால், உள்ளே அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் இருந்த காரணத்தில் அச்சத்தால் பின்னடைந்து விட்டதாகவும் அவன் மீது ஒரு புகார் பதிவாகி இருந்தது தெரிய வந்ததாகக் கூறுகிறார் நசாலி அல்மா.

சேவியர் தாமஸுடன் நசாலி அல்மா போராடி மீண்ட ஜிம் காட்சிகள் அங்கிருந்த சி சி டி வி ஃபூட்டேஜில் பதிவாகி இருக்கிறது. இந்த ஆபத்திலிருந்து மீண்டு வந்த அதிர்ச்சி குறையாமல் இருந்த நசாலி இச்சம்பவம் குறித்து தெரிவிக்க விரும்புவது என்னவென்றால்;

அவன் உள்ளே நுழைந்த போது, யாரோ என்னைப் போலவே ஒரு நண்பர், உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்குள் நுழைகிறார் என்றே நான் எண்ணி இருந்தேன். அவருக்காக கதவைத் திறந்து விட்டேன். ஆனால், உடனே என்னிடம் நெருங்கி வந்த அவன் என்னைத் தொட முயன்றதும்;

‘Bro, what the eff are you doing? Get away from me. Stop trying to touch me,’

என்று அவனிடம் கடுமையாகச் சொன்னேன். ஆனால்,அவன் அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.

வெகு துணிச்சலாக என்னைக் கீழே தள்ளி அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முயன்றான். இதனால் நான் பயந்து விடவில்லை. அடிப்படையில் நான் ஒரு பாடி பில்டர் என்பதால் என்னால் போராட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது. கடைசி வரை வலுக்குறையாமல் போராடினேன். அவனைக் கடுமையாகத் தாக்கி பலமிழக்க வைத்து அவனிடம் இருந்து தப்பினேன்.

இதை நான் இது போன்ற சம்பவங்களுக்கு ஆளாகக் கூடிய சூழல் நேரும் எல்லாப் பெண்களுக்கும் சொல்கிறேன். நீங்கள் உங்கள் பலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள், கடைசி வரை போராடுங்கள். உங்கள் பலத்தை எதிராளிக்குப் புரிய வையுங்கள். அவன் தளர்ந்து இற்றுப் போய் கீழே விழும் வரை உங்கள் முயற்சியைத் தொடருங்கள்’ அது அவனை பலவீனமாக்கி உங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும்’

- என்கிறார்.

அமெரிக்கப் பெண்ணின் இந்த தீரச்செயல் அங்கு வைரலாகிக் கொண்டிருப்பதாகத் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com