டிரம்மில் அடைக்கப்பட்ட இளம் பெண்கள். கர்நாடகாவில் சீரியல் கில்லர் கைவேலை?

டிரம்மில் அடைக்கப்பட்ட இளம் பெண்கள். கர்நாடகாவில் சீரியல் கில்லர் கைவேலை?

டந்த திங்கட்கிழமையன்று கர்நாடகாவில் ஒரு பெண்ணின் சடலம் ட்ரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக ஒரு பெண்ணின் சடலம் ட்ரம்மில் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை பையப்பனஹபள்ளி ரயில்வே ஸ்டேஷனில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பிளாஸ்டிக் ட்ரம்மில் அடைக்கப்பட்டு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு சிசிடிவி யில் ஆட்டோவில் மூவர் வந்து அந்த டிரம்மை வைத்துவிட்டு செல்வது தெரியவந்தது. இதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இதைக் காரணமாக வைத்து, பெங்களூரில் சீரியல் கில்லர் நடமாடி வருகிறார் ஆனால் பாஜக அரசு இதை கண்டு கொள்ளவில்லை என ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் சாடி வருகிறது. இதே போல் கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்று பெண்கள் டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை கண்டறியப்பட்ட சடலத்துடன் சில உடைகள் திணிக்கப்பட்டிருந்ததை வைத்து, கொலையாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்து விட்டதாகக் கூறுகிறார்கள். 27 வயதான தமன்னா என்ற பெண்ணை அவரது மைத்துனரே கொன்று விட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

பிகார் மாநிலத்தில் வசித்து வந்த தமன்னா என்ற பெண் தனது கணவரை விட்டுவிட்டு உறவினர் ஒருவருடன் பெங்களூருக்கு வந்துவிட்டார். இவர்கள் இருவருமே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தமன்னாவின் தற்போதைய கணவரின் சகோதரர், தனது நண்பர்கள் மூலமாக அந்த பெண்ணைக் கொலை செய்துள்ளார். பின்னர் ஆட்டோவில் வந்து ரயில் நிலையத்தில் ட்ரம்மை வைத்துச் சென்றவர்களும் இவர்கள்தான் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ள போலீசார் இன்னும் ஐந்து பேரை தேடி வருகிறார்கள். 

கடந்த சில மாதங்களாகவே பெங்களூரில் பல பெண்கள் கொலை செய்யப்பட்டு வருவதால், இது சீரியல் கில்லரின் வேலையாக இருக்கலாம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு வைக்கிறது. கண்டெடுக்கப்பட்ட மூன்று சடலங்களில் இரண்டு சடலங்களின் அடையாளம் இதுவரை அறிய முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் சீரியல் கில்லர் குற்றச்சாட்டை பெங்களூர் போலீசார் மறுத்துள்ளனர்.  இதுவரை நடந்துள்ள கொலை சம்பவங்களுக்கு பின்னால், சீரியல் கில்லர் இருப்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை என போலீசார் தரப்பில் கூறியுள்ளார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com