
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நடவடிக்கையை தாமதப்படுத்துவதாக பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் ஆளுநர்களை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. முன்னதாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவதாக இந்த இரு மாநிலங்களும் குற்றஞ்சாட்டியிருந்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்யக்கூடாது. இது கவலை அளிக்கும் விஷயமாகும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். ஒப்புதல் தர முடியாது என்று ஆளுநர் எப்படிச் சொல்ல முடியும். பஞ்சாப் ஆளுநரின் செயல்பாடு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர வேண்டாமா? நாம் சில மரபுகளை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். அதை நாம் பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.
முன்னதாக மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருவதாக பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தது.
ஆளுரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் மாநில அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டது என்று பஞ்சாப் அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். நிதி நிர்வாகம் மற்றும் கல்வி தொடர்பான ஏழு மசோதாக்கள் ஆளுநரிடம் முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதமே ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு மசோதாக்கள் மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளதாகவும். இதனால் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து பஞ்சாப் மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எடுத்த நடவடிக்கை என்ன என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அரசு ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக பகவந்த் மான் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே முதல்வருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் மோதல் நீடித்து வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தை போலவே தமிழ்நாட்டிலும் ஆளுநர்-முதல்வர் இடையே மோதல் நீடித்துவருகிறது. மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.