யூடியூபர் இர்பானின் கார் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு!

யூடியூபர் இர்பானின் கார் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு!
Published on

பிரபல யூட்யூபரான இர்பானின் கார் விபத்துக் குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

யூடியூபில் மிகவும் பிரபலமானவர் 'இர்பான் வியூவ்ஸ்' என்ற youtube சேனலை நடத்தும் இர்பான். சென்னையைச் சேர்ந்த இவருக்கு youtube-ல் 3 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். உணவுகள் சார்ந்து பதிவு போடுவதில் இவர் பிரபலமானவர். கையேந்தி பவன் முதல் மிகப்பெரிய லக்சரி ஹோட்டல்கள் வரை அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு ரிவியூவ் சொல்வார். யூடியூபில் இவருக்கென்று தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது எனலாம். 

இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது. தன் திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றியிருந்தார். இந்நிலையில்தான் இவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. செங்கல்பட்டு, மறைமலர் நகர் அருகே இவர் கார் சென்றபோது எதிரே வந்த பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விபத்தை ஏற்படுத்தியது இர்ஃபானின் கார் டிரைவரான அசாருதீன் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெயர் பத்மாவதி (வயது 55). பொத்தேரி அருகே வசித்து வரும் இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். அன்று பணி முடிந்து மறைமலை நகரிலுள்ள தன் மகளின் வீட்டுக்கு சென்றுவிட்டு, மறுபடியும் பொத்தேரிக்கு வரும்போது சாலையை கடக்கையில் இந்த விபத்து நடந்துள்ளது. 

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக பொத்தேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பத்மாவின் சடலத்தை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விபத்தை ஏற்படுத்தியவரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் இந்த சொகுசு கார் பிரபல யூடியூபருடையது என்பதே போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய அசாருதீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதனிடையே கிடைத்த இன்னொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், விபத்து நடந்த இடத்தில் சிலர் இர்ஃபானைப் பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே ஒரு வேலை இர்பான் கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓடிவிட்டாரா? அல்லது உண்மையிலேயே அந்த இடத்தில் அவர் இல்லையா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. 

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், உண்மையிலேயே இந்த விபத்து எப்படி நடந்தது? யார் நடத்தியது? என்ற உண்மைகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com