அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!

அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!
Published on

மிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில காலங்களில் அண்ணாமலையின் பரபரப்பான பேச்சும் செயல்பாடுகளும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் மக்களிடையே மாறி மாறி இருந்து வருகிறது. அதோடு, சில நாட்களுக்கு முன்பு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்களும் நடைபெற்றதை அனைவரும் அறிவர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வந்த வேளையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலையின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து சென்றுள்ளனர். அப்படி சோதனை செய்ததற்கான ஒப்புதல் கையெழுத்தும் அண்ணாமலையிடம் வாங்கிச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவோயிஸ்டுகள் மற்றும் மத தீவிரவாதிகளிடமிருந்து அண்ணாமலைக்கு மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது. அதனாலேயே அவருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுவரை அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பே கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு, இந்த வாரத்துக்குள் இசட் பிரிவு பாதுகாப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 22 கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு தருவார்கள். மேலும், இசட் பிரிவு பாதுகாப்பில் குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் பயன்படுத்தப்படும். இந்த இசட் பிரிவு பாதுகாப்பு தனிப்படைக்கு மாதம் ஒன்றுக்கு 16 லட்சம் ரூபாய் செலவாகும் என சொல்லப்படுகிறது. அண்ணாமலையின் வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் முழுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் உள்துறை அமைச்சகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com