செளரவ் கங்குலிக்கு 'Z'பிரிவு பாதுகாப்பு!

செளரவ் கங்குலிக்கு 'Z'பிரிவு பாதுகாப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) முன்னாள் தலைவருமான செளரவ் கங்குலிக்கு z பிரிவு பாதுகாப்பு வழங்க மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த “Y” பிரிவு பாதுகாப்பு காலம் காலாவதியானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வி.வி.ஐ.பி.க்களுக்கு அதாவது முக்கியப் பிரமுகர்களுக்கு, அதிமுக்கிய பிரமுகர்களுக்கு எக்ஸ், ஒய், இஸட் மற்றும் இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அவர்களுக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படும். அவை காலாவதியான பிறகு பாதுகாப்பை நீட்டிக்க வேண்டுமா, அல்லது ரத்துச் செய்ய வேண்டுமா என்பதை அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்.

இந்நிலையில் செளரவ் கங்குலிக்கு அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பின் காலம் முடிவடைந்ததை அடுத்து அவரது பாதுகாப்பை நீட்டிப்பது குறித்து முறையாக பரிசீலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மேற்குவங்க அரசு முடிவுசெய்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய Z பிரிவு பாதுகாப்பு ஏற்பாட்டின்படி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீர்ரான செளரவ் கங்குலிக்கு 8 முதல் 10 போலீஸார் பாதுகாப்பு அளிப்பார்கள். ஏற்கெனவே அவர் ஒய் பிரிவு பாதுகாப்பில் இருந்தபோது அவருக்கு மூன்று போலீஸார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இதேபோல அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செளரவ் கங்குலிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விவாதிப்பதற்காக தலைமைச் செயலக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அவரது அலுவகத்துக்குச் சென்றனர். அங்கு கொல்கத்தா போலீஸார் மற்றும் லால்பஜார் போலீஸ் நிலைய அதிகாரிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு கங்குலிக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை இஸட் பிரிவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

கங்குலி தற்போது தில்லி கேபிடல் கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருப்பதால் அவர் பயணத்தில் உள்ளார். அவர் இந்த மாதம் 21 ஆம் தேதி கொல்கத்தா திரும்பிய நாள் முதல் அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் கட்சியின் தேசிய செயலருமான அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் பிர்ஹாத் ஹகீம் மற்றும் மோலி காடக் இருவருக்கும் இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில பா,ஜ.க. தலைவர் சுகந்த மஜும்தாருக்கும் இஸட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர அவருக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படை பிரிவு போலீஸாரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com