குதிரையில் உணவு டெலிவரி செய்த ஜுமோட்டோ ஊழியர்!

Zomato delivery person goes riding a horse  to deliver food
Zomato delivery person goes riding a horse to deliver food

புதிய கடுமையான போக்குவரத்து சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தியதால் ஹைதராபாதில் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட க்யூ வரிசையில் நின்றதால் புத்திசாலியான ஜுமோட்டோ ஊழியர் ஒருவர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த விடியோ வரைலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த நபர் இம்பீரியல் ஹோட்டல் அருகே சஞ்சல்குடாவில் குதிரையில் சென்றது விடியோவில் பதிவாகியிருந்த்து. சாலையில் குதிரையில் சென்ற அவர், பொதுமக்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டே சென்றார்.

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்து போன நிலையில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்வதாக அந்த ஜுமோட்டோ ஊழியர் வழிப்போக்கர்களிடம் தெரிவிப்பதையும் விடியோவில் காண முடிந்தது.

என்ன நடந்தது? என்று அவரிடம் கேட்டபோது, பெட்ரோல் இருப்பு இல்லை. பெட்ரோல் நிலையத்தில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தும் எனக்கு பெட்ரோல் கிடைக்கவில்லை. உணவுக்கான ஆர்டரை நான் வாங்கிவிட்டேன். ஆனால், வாகனத்தில் சென்று டெலிவரி செய்வதற்கு எனக்கு பெட்ரோல் கிடைக்கவில்லை. எனவேதான் இந்த புது முயற்சி என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலுக்காக வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் போலீஸார் தலையிட்டதால் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

பெட்ரோல் இருந்தது. ஆனால், லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் காரணமாக பெட்ரோல் கிடைக்குமோ கிடைக்காதோ என்று பலரும் முண்டியத்துக்கொண்டு பெட்ரோல் நிலையங்களை நோக்கி படையெடுத்தனர். இதனால்தான் பெட்ரோல் நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டது என்றார் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர்.

சில பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகளை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது என்று கூறி நிலையங்களை மூடிவிட்டதாலேயே பிரச்னை ஏற்பட்டது.

எனினும் புதிய, கடுமையான விதிகள் கொண்ட மோட்டார் வாகன போக்குவரத்து சட்\டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் அரசு உறுதியளித்ததை அடுத்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றது.பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் போடப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து சட்டவிதிகளை மாற்றி அதைவிட கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

புதிய சட்டத்தின்படி விபத்து ஏற்படுத்திவிட்டு போலீசுக்கு தெரிவிக்காமல் தப்பியோடும் வாகனத்தின் ஓட்டுநர் மீது 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (தற்போது இந்த குற்றத்துக்கு 2 ஆண்டு சிறை மற்றும் இலகுவான அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது.) இதற்கு லாரி, கார் மற்றும் சரக்குவாகன ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com