அரசியல் களம் : இந்த வாரம், இவ்ளோதான்!

அரசியல் களம் :  இந்த வாரம், இவ்ளோதான்!
Published on

#1 இரண்டாக உடைந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி - மறுபடியும் துணை முதல்வரான அஜித் பவார்!

பா.ஜ.கவுக்கு எதிராக ஓரணியில் நிற்கவேண்டும் என்று சரத்பவார் பேசிவந்த நிலையில் அவரது தேசியவாத கட்சியை உடைத்து, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஐந்தாவது முறையாக அஜித் பவார் துணை முதல்வராக ஆகியிருக்கிறார். தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்து பின்வாங்கிய சரத் பவார், கட்சி பிளவுபடும் என்பதை எதிர்பார்க்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக பா.ஜ.கவுடன் ரகசியமாக பேசி வந்த அஜித் பவாரின் அதிரடி மூவ் சரத்பவாருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்கிறார்கள். சென்ற முறை அஜித் பவார் கட்சியை உடைத்து, பா.ஜ.கவோடு சேர்ந்தபோது அது சரத்பவார் போட்ட பிளான் என்று பேசியவர்களும் உண்டு.

#2 மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றத்தை நாடும் ராகுல்காந்தி!

ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவரது மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்றும் அதில் குஜராத் உயர்நீதிமன்றம் தலையிடமுடியாது என்றும் மறுத்திருப்பது காங்கிரஸ் நிர்வாகிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், இது குஜராத் நீதிமன்றத்தின் பலவீனத்தைக் காட்டுவதாகவும் உச்சநீதிமன்றம் உரிய நீதியை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#3 ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தினால் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு

மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தில் பங்குபெற நினைக்கும் பெண்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தின் மின்சார பயன்பாடும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதியை நிர்ணயம் செய்கிறது. ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பங்கள் அதாவது மாதந்தோறும் 300 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தும் குடும்பங்கள் மட்டுமே உரிமைத்தொகைக்கு தகுதி பெற முடியும்.

#4 மேகதாது அணை கட்டுவதற்கான ஒப்புதல் பெறப்படும் - கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி!

ஏழாவது முறையாக கர்நாடாகவில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள முதல்வரும் நிதியமைச்சருமான சித்தாராமையா, மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேகதாது பகுதியை சமன்படுத்துதல், குடிநீர் திட்டத்துக்கான அனுமதி பரிந்துரை உள்ளிட்டவை குறித்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரியும் பரஸ்பரம் அறிக்கை மூலம் பரபரப்பை கிளப்பினார்கள்.

#5 தேனி தொகுதியின் எம்.பியாக ரவீந்திரநாத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் தமிழக முதல்வரும் அ.தி.மு.க தலைவருமான பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் சமர்ப்பித்த வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்குமாறு தொடரப்பட்ட வழக்கில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேல் முறையீட்டிற்காக ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தை அணுகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com