ஆடி 18 ஸ்பெஷல்: தொட்டதெல்லாம் துலங்கும் ஆடிப்பெருக்கு... ஆகஸ்ட் 3 தருமபுரிக்கு உள்ளூர் விடுமுறை!

விதைத்தால் பல்கி பெருகும் மங்களகரமான நாள்; தாலி பிரித்து கட்டுதல் மற்றும் சங்கரநாராயணர் வழிபாட்டுச் சிறப்புகள்!
ஆடிப்பெருக்கு பண்டிகை
ஆடிப்பெருக்கு பண்டிகைAI Image
Updated on

ஆடியில் பொங்கி வரும் காவேரி நம் வாழ்வை வளப்படுத்தும் அன்னையாக இருக்கிறாள். அந்த அன்னைக்கு நாம் அனைவரும் குடும்பத்தோடு சென்று மரியாதை செலுத்தும் தினம்தான் 'ஆடிப்பெருக்கு' . 'ஆடிப்பெருக்கு' திருநாள் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 3 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தருமபுரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருக்கு என்றால் பெருக்குதல் என்று பொருள். ஆடி மாதம் 18-ம் நாளை ஆடிப்பெருக்கு என்று அழைக்கிறோம். இந்த நாளில் தொடங்கும் செயல் எதுவும் பல்கிப் பெருகும் என்பதால் இதற்கு ஆடிப்பெருக்கு என்று பெயர். ஆடிப்பெருக்கு நாளில் விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர் மரபில் நீடித்திருக்கும் வழக்கம். இதன் அடிப்படையில் விவசாயத்துக்கு ஆதாரமான ஆறு, குளம், நீர்நிலைகள் போன்றவற்றைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் நாள் ஆடிப்பெருக்கும். ஆடிப் பெருக்கு என்றதும் எல்லோருக்கும் காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நினைவுக்கு வரும். ஆனால் காவிரிக்கரையில் உள்ளவர்கள் மட்டுமல்ல சகலரும் வழிபட வேண்டிய அற்புதமான திருநாள் இந்த ஆடிப் பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள் ஆற்றங்கரையில் வழிபடும் ஒரு பண்டிகை மட்டுமல்ல. அது தமிழகத்தின் கிராமங்களின் ஆன்மா.

ஆடிப்பெருக்கு என்பது நம் நதிகளுக்கு நன்றி சொல்லும் நாள்.

விவசாயத்தை வணங்கும் நாள்.

குடும்பங்கள் ஒன்று கூடும் நாள்.

குழந்தைகள் நம் கலாச்சாரத்தை நேரில் கற்றுக்கொள்ளும் நாள்.

ஆடிப்பெருக்கு பண்டையகாலம் முதலே தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. குறிப்பாக பண்டையத் தமிழ் நூல்களில் மிகமுக்கிய பிடித்திருக்கும் நூல் பொன்னியின் செல்வன். அந்த நூலில் வரும் முக்கிய கதாபத்திரமான வல்லவராயன் வந்தியத்தேவனும், மற்ற முக்கிய கதாபத்திரங்களான பெரிய பழுவேட்டரையர், நந்தினி தேவி போன்றோரின் அறிமுகங்கள் ஆடிப்பெருக்கின் பின்புலத்திலேயே இருக்கும். அந்த இடத்தில் கல்கி அவர்கள் ஆடிப்பெருக்கை வர்ணித்திருப்பதை ரசிக்கத்தவர்களோ, அதை எண்ணி வியக்கத்தவர்களோ மிகக்குறைவு. அவ்வாறு நம் வாழ்வியலுடன் கலந்த முக்கிய பண்டிகை ஆடிப்பெருக்காகும்.

ஆடிப்பெருக்கு அன்று உற்சாகம் பொங்கி வழியும். பெண்கள் கூட்டம் கூட்டமாக ஆற்றங்கரைக்கு சென்று காவிரி அன்னைக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவையாறு புஷ்ப மண்டபம் படித்துறை, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை ஆகிய இடங்களில் புதுமணத் தம்பதிகளால் நிறைந்திருக்கும்.அன்றுதான் தாலி பெருக்கி கொள்வார்கள். தமிழ் சமூகத்தில் பெரும்பாலும் புதிதாய் திருமணமான தம்பதிகளை பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால் அதே சமயம் ஆடிப்பெருக்கு அன்று தாலி பிரித்து கட்டுதல் என்ற ஒரு சடங்கும் தமிழ் கலாச்சாரத்தில் பின்பற்ற பட்டு வருகிறது. புதிதாய் திருமணமான தம்பதிகள் புது ஆடை உடுத்தி தாலியில் இருக்கும் கயிறை மாற்றி மீண்டும் தாலி கட்டுவார்கள். இதன்மூலம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் மகிழ்ச்சியாய் வாழலாம் என்று நம்பப்படுகிறது.

ஆடி பெருக்கு விழா
ஆடி பெருக்கு விழாAI Image

ஆடிப்பெருக்கு இயற்கை அன்னை நமக்கு வழங்கிய கொடைக்காக நன்றி கூறும் விதமாக கொண்டாடப்படுவது. ஆற்றங்கரையில் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தண்ணீரோடு கரைந்து விடவும், எதிர்கால வாழ்க்கை சுபிட்சமாகவும் இருக்க வேண்டுமென அனைத்து தெய்வங்களையும் பிரார்த்திக்கும் விதமாக நடைமுறையில் இருக்கும் ஆடிப்பெருக்கு மக்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய சிறப்பான நாளாகும்.

இந்து புராணங்களின்படி பார்வதி தேவி சிவபெருமானிடம் திருமாலுடன்இணைந்து தன்னை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்று சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணனாக பார்வதி தேவியை ஆடிப்பெருக்கன்று ஆசீர்வதித்தனர். எனவே ஆடிப்பெருக்கன்று இறைவனை வழிபடுவது விஷ்ணு மற்றும் சிவனின் பூரண அருளை நமக்கு பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது.பெருக்கு என்பதன் பொருள் உயர்த்துவது ஆகும். ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவி பூரண மகிழ்ச்சியுடன் காட்சியளிப்பார். எனவே அந்த சமயத்தில் லட்சுமி தேவியை வணங்கும்போது கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வம், குழந்தை பாக்கியம், தைரியம் என அனைத்தும் கிடைக்கும். அதேபோல ஆடிப்பெருக்கு அன்று குபேரனை வழிபடுவது எவ்வளவு பெரிய நஷ்டத்திலிருந்தும் மீண்டு வர வழிவகுக்கும்.

வழிபடும் முறை :

காலையிலேயே ஆற்றங்கரை சென்று குளித்து புத்தாடை உடுத்தி மணலில் பிள்ளையார் செய்து கற்பூரம் காட்டி அந்த கற்பூரத்தை ஒரு வெற்றிலையில் வைத்து தண்ணீருடன் விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்வது உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. கிராமமாய் இருந்தால் அங்கே "முளைப்பாரி" ஆற்றில் விடுவது மிகவும் பிரசித்தமாகும்.

ஆடிப்பெருக்கு என்பது வீட்டிற்குள் அடைந்து கிடக்க கிடைக்கும் விடுமுறை அல்ல, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியை பகிரகிடைத்த நாளாகும். எனவே அதனை உபயோகமாக கொண்டாடுங்கள்.

தருமபுரி மாவட்டத்திற்கும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், தருமபுரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளைப் போல, குடும்பங்கள் ஒன்றுகூடி இயற்கையைப் போற்றும் இந்த ஆடிப்பெருக்கு திருநாளையும் தமிழ்நாடு அரசு மாநில அளவிலான பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடிப்பெருக்கை ஒட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1,610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ஜூலை 31ஆம் தேதி 420 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 1ஆம் தேதி) 330 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று (ஆகஸ்ட் 2ஆம் தேதி) 270 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து தி.மலை, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜூலை 31ஆம் தேதி 120 பேருந்துகள் எனக் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதம்: வழிபாடு முதல் கூழ் செய்வது வரை... தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!
ஆடிப்பெருக்கு பண்டிகை
logo
Kalki Online
kalkionline.com