உத்தரப்பிரதேசம் போல் தமிழ்நாட்டிலும் கூலிப்படையினர் ஒடுக்கப்பட வேண்டும் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

உத்தரப்பிரதேசம் போல் தமிழ்நாட்டிலும் கூலிப்படையினர் ஒடுக்கப்பட வேண்டும் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

உத்திரப் பிரதேச மாநில அரசு கூலிப்படை மீது எடுத்த கடும் நடவடிக்கைகளைப் போல் தமிழ்நாடு அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க நிறுவனம் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டில் பா.ம.க நிர்வாகி கூலிப்படை தாக்குதலில் உயிரிழந்த நிலையில் கூலிப்படைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பா.ம.க சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டாக்டர் ராமதாஸ், செங்கல்பட்டு பகுதியில் சட்டம் & ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பூக்கடை நாகராஜ் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் போதைப் பொருட்கள் கடத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் காவல்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், தொடர்ந்து கண்காணிக்கவும், பிற கூலிப்படைகளுடனான தொடர்பை துண்டிக்கவும் தவறிவிட்டது. அதன் விளைவாக ஒரு படுகொலை நிகழ்ந்திருக்கிறது.

சென்னைக்கு மிக அருகில் உள்ள பெரிய நகரம், செங்கல்பட்டு. தொழில், வணிகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த இடம், கடந்த பத்தாண்டுகளாக கூலிப்படையினரின் கொடுங்கரங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பதற்காக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கூலிப்படையின் அட்டகாசங்களும், கொலைகளும் அதிகரித்து வருவதும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுவதும் முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயரை தரும். தமிழ்நாட்டை விட கொடிய கூலிப்படையினரின் கூடாரமாக திகழ்ந்தது உத்தரப்பிரதேசம். காவல்துறையினருக்கு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டதன் பயனாக அங்கு கூலிப்படைகள் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கூலிப்படையினரை ஒழிப்பது உத்தரப்பிரதேச காவல்துறையால் சாத்தியமாகும் போது, அவர்களை விட திறமையான தமிழக காவல்துறையால் முடியாதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து கூலிப்படைகளை முற்றிலுமாக அழிக்க அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்று நாளை பா.ம.க சாரர்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க, அ.தி.மு.கவைத் தொடர்ந்து பா.ம.கவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை பற்றி பேசுவதால் அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com