கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 2,500 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 2,500 கிலோ கஞ்சா பறிமுதல்!

டந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை கீரைதுறை காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, வேலவன் புதுக்குளம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வேனில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, போலீசார் வேலவன் புதுக்குளம் கிராமத்துக்கு விரைந்து வந்து தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று இரவு சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வேனில் சுமார் 82 மூட்டைகளில் 2,500 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வேன், 2 கார், 3 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஏழு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை போலீசாருடன் சாத்தான்குளம் டிஎஸ்பி அருள், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் உடன் இருந்தனர். இந்த கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இது தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்தி செல்ல வைக்கப்பட்டிருந்ததா? என்பது போன்ற பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.   

இது குறித்து, மதுரையில் பிடிபட்ட நபரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே திருச்செந்தூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சா பிடிபட்ட நிலையில், இன்று சாத்தான்குளத்தில் 2,500 கிலோ கஞ்சா பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என போலீசாரால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் 2500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com