துபாய் எக்ஸ்போ கண்காட்சி: ஒரு விர்ச்சுவல் டூர்!

துபாய் எக்ஸ்போ கண்காட்சி: ஒரு விர்ச்சுவல் டூர்!
Published on

-பிரமோதா.

பிரம்மாண்டம்..என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கி விட முடியாதபடி அத்தனை  பிரமிப்பாக வியக்க வைத்தது – துபாயில் நடந்த சர்வதேச தொழிற்கண்காட்சி எக்ஸ்போ-2020. மொத்தம் 192 நாடுகள் பங்கேற்ற இந்த எக்ஸ்போ கண்காட்சி 173 நாட்கள் ( அதாவது 6 மாதம்) கோடிக்கணக்கான பார்வையாளர்கள் என  மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது துபாய் எக்ஸ்போ.

வழக்கமாக நடக்கும் பொருட்காட்சிகளிலிருந்து இது என்ன வித்தியாசம்?!

வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் திருவிழாபோல  இந்த எக்ஸ்போவும் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட நாட்டில் நடைபெறுகிறது. அடுத்து எந்த நாட்டில் எக்ஸ்போ நடத்தப்பட வேண்டும் என்பது – பிரான்ஸ் நாட்டில் இதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள ஒரு தனி கமிட்டி தீர்மானிக்கும். இந்த கமிட்டிதான், எக்ஸ்போ நடத்துவதற்கான நாட்டை முடிவு செய்யும். முதல் எக்ஸ்போ 1800-களிலேயே ஆரம்பித்து விட்டதாம். ''உலகம் சுற்றும் வாலிபன்'' படம் ஞாபகம் இருக்கிறதா? அந்த  படத்தில் ஜப்பான் எக்ஸ்போவை அறிமுகம் செய்தவர் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அந்த படம் 70-களிலேயே பிரம்மாண்டம்….ஜப்பான் எக்ஸ்போவில் புகுந்து புறப்பட்டிருப்பார் அந்த படத்தின் ஓளிப்பதிவாளர்..

சரி.. இப்போது துபாய் எக்ஸ்போ-வுக்கு வருவோம்.. கிட்டதட்ட 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்..நீண்டு விரிந்திருக்கும் மைதானத்தில் கட்டப்பட்ட பல்வேறு நாடுகளின் அரங்கங்கள் பிரமிப்பூட்டின.. .. வண்டியை பார்க்கிங் செய்யவே 19 கிலோமீட்டர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். .. இந்த எக்ஸ்போவின் முக்கிய நோக்கமே வியாபாரம்.. சந்தைப்படுத்துதல்தான்!

''அந்தந்த நாடுகள் இப்படி எக்ஸ்போவில் தங்கள் நாட்டு தொழில் நுட்பத்தையும்.. அழகியலையும் கலாசாரத்தையும் கலந்து சந்தைப்படுத்தும் போது  மனதில் பச்சக்கென்று இடம் பிடித்து விடுகிறது. இந்தியா அரங்கும் அப்படித்தான் நம் நாட்டின் வகைவகையான பாரம்பரிய கலாசாரச் செறிவுடன் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஷோ-கேஸ் செய்திருப்பது வெளிநாட்டினரையும் கவர்கிறது'' என்றார், தமிழின் பிரபல செய்தி வாசிப்பாளர்களில் ஒருவரான சரயூ..

இந்த கண்காட்சி அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 31-ல் நிறைவுபெற்றது. இதில் கடிசிவாரம் தமிழ்நாடு வாரமாக கொண்டாடப்பட்டது. கடைசி வாரத்தில் தமிழ்நாடு பெவிலியனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த கடைசி வாரம் தமிழ்நாடு வாரமாக கொண்டாடப்பட்டது இந்த விழாவையொட்டி, துபாயில் உள்ள 2217 அடி உயரம் கொண்ட உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தினை பார்வையிட்டார்.

'செம்மொழியான தமிழ்மொழியாம்'' என்று பார்வையாளர்கலும் கோரஸாகப் பாட, அந்த இடமே ஒரே குதூகலம்.. இந்த நிகழ்வுகளின் போது, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் முதல்வரின் தனிச் செயலர்கள்  ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலினை அங்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சந்தித்து, அங்குள்ள தனது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற முதலமைச்சர் ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார். அங்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கும் *மூப்பில்லா தமிழே… தாயே* என்ற ஆல்பத்தை முதலமைச்சருக்கு போட்டுக் காட்டினார்.

இந்த கண்காட்சியின் பொதுவான ஒரு சிறப்பம்சம் – விர்ச்சுவல் டூர்! அதாவது ஒவ்வொரு நாடும்.. தங்களின் பண்பாடு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அரங்குகளோடு..தங்கள் நாட்டின் ளைபொருட்கள்..உற்பத்தி பொருட்களையும் கடை விரித்து மற்ற நாட்டினருக்கு ஆர்வத்தை தூண்டி விடுகின்றனர்.

இந்த எக்ஸ்போவில் எல்லா உலக நாடுகளுக்கும் விர்ச்சுவலாக..மெய்நிகர் காட்சிகள் மூலம் அழைத்து செல்கிறார்கள்..எந்த நாடு என்று நீங்கள் சொன்னால் போதும்.. உங்கள் கண்முன்னே அந்த நாடு விரியும். இந்த எக்ஸ்போவில் பங்கேற்ற 192 நாடுகளில் அதிக அளவில் கவனம் ஈர்த்த நாடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. டாப் டென் பட்டியலில் முதலிடம் சவூதி அரேபியாவுக்குத்தான்! அந்த நாட்டின் அரங்கு கொள்ளை அழகு.. அற்புதமாக வடிவமைக்கப்பட்ட அரங்கின்  முன்..ஒரிஜினல் அரபிக்குத்து டான்ஸ்.பலரின் அப்ளாஸ்களை அள்ளியது. தொடர்ந்து பார்வையாளர்களைகக் கவர்ந்தது – ரஷ்யா.. பின்லாந்து.. ஆஸ்திரேலியா! இந்தியாவின் அரங்கு பற்றி சொல்லவே வேண்டாம்.. அந்தள்வு தினமும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள்.. இந்தியாவின் தொன்மையான நாகரீகம்… ஆயுர்வேத மருத்துவம்…பாரம்பரிய உணவு வகைகள்.. தொழில் நுட்ப வளர்ச்சி என்று மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது அரங்கு..அனைத்து மாநில கலாச்சாரத்தையும்..உணவு வழக்கங்களும் வெளி நாட்டு மக்களை வாய் பிளக்க வைக்க வைத்தன. அதனால் மீண்டும் மீண்டும் இந்திய அரங்குக்கு அவர்கள் படையெடுத்தனர். இந்திய அரங்கில் இருக்கும் தமிழக அரங்கும் தொழில் முனைவோரின் கவனத்தை ஈர்த்ததில்  தமிழகத்தில் முதலீடு செய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்

இந்த எக்ஸ்போவை கண்காட்சி என்பதை விட ஒரு virtual tour..என்றே சொல்லலாம்.. அந்தளவுக்கு வருங்காலத்தில் தொழில் நுட்பம் எப்படி இருக்கும் என்று விவரிக்கும் அரங்குகள் அதிரவைக்கின்றன..aGPS shoes..ஒரு படி மேலே புருவம் உயரவைக்கிறது..இந்த கண்காட்சியை ஒரு நாளில் பார்த்து விட முடியாது என்பதால் சீசன் டிக்கெட்கலும் கொடுக்கப் பட்டன.

பொருட்காட்சி எனும்போது.. ஆட்டம் பாட்டத்திற்கும்..விளையாட்டுக்கும்..விதம் விதமான உணவு வகைகளுக்கும் கேட்கவா வேண்டும்.. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள்..பெரும்பாலும் வாயிலே நுழையாத பெயர்கள்.. நம்ம ஊரு மொளகா பஜ்ஜியும்..டெல்லி அப்பளமும் கிடைக்குமா? என்று கேட்டோம்.. அங்கிருந்தவர்கள் நம்மை மேலும் கீழும் பார்க்க, ஒடிவந்து விட்டோம். துபாய் எகஸ்போவின் பிரம்மாண்டத்தை விஸ்தீரணத்தையும் பார்க்கும் போது நம்ம ஊர் பொருட்காட்சி இமயமலைக்கும்..எறும்புக்கும் உள்ள வித்தியாசம் என்று கிறுகிறுக்க வைத்தது. சின்ன குழந்தை ஆரம்பித்து பல் போன பெரியவர்கள் வரை அத்தனை பேருக்கும் இந்த கண்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இவை போன்ற கண்காட்சிகளை பார்க்க வேண்டும்.. இந்த முறை மிஸ் செய்தால் என்ன…அடுத்த ஓலிம்பிக்ஸில்…ஸாரி.. எக்ஸ்போவில் சந்திக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com