பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டருக்கு அருகே ஏராளமான கறுப்பு பலூன்கள் பறந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த 2 நாட்களாக பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொண்டர்கள் இடையே உரையாற்றினார்.
இந்நிலையில் செயற்குழுக் கூட்டம் முடிவடைந்ததை அடுத்து, பிரதமர் மோடி, ஐதராபாத்திலிருந்து நேற்று மாலை விஜயவாடாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
பிரதமரின் ஹெலிகாப்டர் பறக்க தொடங்கிய 5 நிமிடங்களில் 50-க்கும் மேற்பட்ட கருப்பு பலூன்கள் அவரது ஹெலிகாப்டர் அருகே பறந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் கறுப்பு பலூன்களை பறக்க விட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விஜயவாடா போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.