‘பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் கொடுங்கள்’ சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்!

‘பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் கொடுங்கள்’ சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்!

மிழ்நாடு மாநில சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் மற்றும் காவல்துறையின் புதிய தலைவராக சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த ஆய்வுக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், ஏதோ நிறைய பிரச்னைகள் இருப்பதாக நீங்கள் கருத வேண்டாம். ஒரு அரசு நல்லரசாகச் செயல்படுவதற்கு சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு இன்று அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு முக்கியமான காரணம், நமது அரசு சட்டம் - ஒழுங்குக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான். நாம் சட்டம் ஒழுங்கை முறையாகக் கடைப்பிடித்து வருகிறோம் என்பதன் அடையாளம்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள். நிம்மதியும், அமைதியும் இருக்கும் மாநிலத்தில்தான் நினைத்த திட்டங்களை செயல்படுத்த முடியும். அந்த வகையில் மிக நிறைவான காலமாக இந்த இரண்டு ஆண்டுகள் அமைந்துள்ளது. இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள், காவலர்களுக்க எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது. என்றாலும், அடுத்து வரும் ஓராண்டு காலம் நமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்தக் காலத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் மேலும் சிறப்பாக அமைவதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை கண்டறியப்பட்டவுடன் அதை முறையாக முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அவை மக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் வண்ணம் பெரிய நிகழ்வுகளாக உருமாறுவதை தவிர்க்க வேண்டும். அடுத்த ஓராண்டு காலத்துக்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், மிகவும் எச்சரிக்கையுடன் காவல்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும்போது, கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். அவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது. காவல் மரணங்கள் முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் நமது அரசு எப்பொழுதுமே சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலேயே நமது மாநிலத்தில்தான் பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வருகிறார்கள். அதேபோல, வேலைக்குச் செல்லும் பெண்களும் நாட்டிலேயே நமது மாநிலத்தில்தான் அதிகமாக இருக்கிறார்கள். கல்விக் கூடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது தலையாய கடமை. பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, எனது அறிவுரையின்பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் கடும் நடவடிக்கைகளால், தற்பொழுது கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை தொடர, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது நடுநிலைமை தவறாமல் இருத்தல் வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், காவல் நிலையங்களிலேயே பேசி முடித்துக் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

போதை என்பது அதனைப் பயன்படுத்தும் தனி மனிதரின் பிரச்னை மட்டும் அல்ல! அது சமூகப் பிரச்னை! போதையை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்குத் தூண்டுதலாக இருக்கிறது. ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும், ‘தங்களது மாவட்டத்துக்குள் போதை விற்பனையை முற்றிலும் தடை செய்து விட்டேன்’ என்று மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சாதி, மத ரீதியான மோதல்களைத் தடுப்பது ஒரு பக்கம் என்றால், சமூக இணைய தளங்கள் மூலம் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்புவர்கள் அதிகமாகி வருகிறார்கள். அவர்கள்தான் சமூக அமைதி கெட காரணமாக இருக்கிறார்கள். அவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், சொகுசாக உட்கார்ந்து கொண்டு இதுபோன்ற வன்மங்களை விதைப்பவர்கள் தப்பி விடுவார்கள். இப்படி நச்சுக் கருத்துகளை பரப்புவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறை என்பது நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் துறையாகவும் செயல்பட வேண்டும். கடந்த ஆண்டை விட, கடந்த மாதத்தை விட குற்றம் குறைந்திருக்கிறது என்கிற புள்ளிவிவரம் வேண்டாம். குற்றமே நடைபெறவில்லை என்ற முற்றுப்புள்ளி விவரமே தேவை என்பதை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகிய இருவரும் நான் மேலே கூறிய அறிவுரைகள் அனைத்தையும் மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்!

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., உள்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் இ.கா.ப., துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com