0,00 INR

No products in the cart.

எவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய மிகச் சிறந்த படைப்பு

நூல் அறிமுகம்

இந்துமதி மனோகரன்
(வாசிப்போம்… தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) 

கடுகு வாங்கி வந்தவள்

வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள உந்தும் புத்தகங்கள் என்றுமே எனக்கு உவப்பானவைதான். அந்த வகையில் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பி.வி.பாரதியின் அனுபவக் கதையான ‘கடுகு வாங்கி வந்தவள்’, வாழ்கையின் துன்பப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கும் எவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய மிகச் சிறந்த படைப்பு.

பெங்களூரில் வாழும் பி.வி.பாரதி கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்.
‘சாசுவே தந்தவளு’ என்ற பெயரில் கன்னடப் பத்திரிக்கையில் தொடராக எழுதிய அவரின் அனுபவக் கதையை கே. நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்த படைப்பு ‘கடுகு வாங்கி வந்தவள் ‘. இறப்பே இல்லாத வீட்டில், புத்தர் கடுகு வாங்கிவரச் சொன்ன கதையின் அடிப்படையில் இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பாரதியின் நோய் குறித்தான பயங்கள் எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகவே பார்க்கிறேன், முக்கியமாகப் பெண்களுக்கு. எந்த நோய் பற்றி படித்தாலும் அது நமக்கும் இருக்குமோ என்று எண்ணி கலங்குவதை பலரிடம் கண்டிருக்கிறேன். ஆகையால் அவர் சொல்லும்போது நமக்கும் ‘ஆமாம்’ போடத் தோன்றுகிறது.  ஆனால், பாரதி அதிலும் சற்று அதிகப்படியாக சென்று சின்ன தலைசுற்றலுக்கும் பல சோதனைகள் செய்பவராக இருந்துள்ளார். தொடர்ச்சியாக இப்படியே செய்து பல வருடங்களை மன அழுத்தத்தில் தொலைத்தவர், ஒரு முடிவு செய்து இனி  ’ALL IS WELL’ என்று கவலையில்லாமல் வாழத் தொடங்கிய நேரம், கேன்சர் கதவு தட்டியிருக்கிறது.

உண்மையில் தன்னை மிகவும் திடம் வாய்ந்தவராக நினைத்துக் கொள்ளும் பலரும், சிறு பிரச்னையின்போது கலங்கி நிற்பதையும், எதற்கும் பயந்தவர் எனப் பெயர் எடுத்தவர் பெரிய சவால்களை மிகுந்த மனத் திடத்துடன் எதிர்கொள்வதையும் பார்த்திருப்போம். பாரதியின் விஷயத்திலும் அப்படியே நடக்கிறது.

உடல் மற்றும் மனத்தில் நோய் உண்டாக்கும் பலவீனத்தை தனக்கே உண்டான நிறை குறைகளுடன் வெற்றிகரமாகக் கடந்து வருகிறார்.

நோயின் அதிர்ச்சியில் இருந்து மீளாத ஒருவரை மேலும் பலவீனமாக்கும் சில மருத்துவர்களின் உணர்ச்சியற்ற போக்கையும் பாரதி  இங்கே சுட்டுகிறார். இது  நோயாளிகளின் வேதனையையும் போராட்டத்தையும் இரட்டிப்பாக்கி விடுகிறது.

கேன்சர் கட்டியைத் தொட்டுப் பார்க்க டாக்டர் வற்புறுத்துகையில் வேண்டாம் என அலறிய அந்தப் பெண்தான், நோயிலிருந்து அத்தனை துணிச்சலுடன் மீண்டார் என்பது வியப்பளிக்கும் விஷயம்.

மிகுந்த உணர்ச்சிகரமானவளாகத் தன்னை பாரதி வெளிப்படுத்திக் கொண்டாலும் அவரது எழுத்தில் அழுது வடிதல் எங்குமே இல்லை. மிகவும் சிரமமான சூழலிலும் தன்னையே பகடி செய்துகொண்டு உற்சாகமானவராகவே காணப்படுகிறார். சில வேளைகளில் அந்த உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

கீமோ சிகிச்சையின்போது முடி இழப்பு ஏற்படும் என்பது தெரிந்திருந்தாலும் அந்த அனுபவத்தை பாரதி ஒவ்வொரு படியாக சொல்லும்போது ஒரு பெண்ணாக அந்த வலியை நினைத்து நெஞ்சம் பதைபதைக்கிறது.

எல்லாப் பெண்களும் நினைப்பதைப் போல ‘தனது குடும்பத்திற்குத் தான் இன்றியமையாதவள்’ என்று கருதியிருக்க, ‘குடும்பச் சக்கரம் தானில்லாத நிலையிலும் தள்ளாட்டமின்றி சுழலும்’ என்ற உண்மை முகத்தில் அறைந்ததையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார்.

நோயின் தாக்கத்தால் பல சமயங்களில் மனம் துவண்டு போனாலும் அதிலிருந்து மீண்டு வர அவர் எடுக்கும் முயற்சிகள்  படிக்கும் எவருக்கும் ஊக்கமளிப்பவை.

“தயவு செய்து எச்சரிக்கையுடன் எங்களை கையாளுங்கள். நாங்கள் மென்மையானவர்கள்” என்று அவர் கூறுகையில் நோயின் பிடியில் சிக்கியிருக்கும் நம் நெருங்கியவர்கள் நோக்கிய நமது பார்வையை மாற்றிப் போடுகின்றன.

‘மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே மெல்லிய கோடுதான் உள்ளது’ என்னும் எண்ணத்தை நம்மில் ஆழப் பதிக்கிறது இந்தப் புத்தகம்.

யு.ஆர். அனந்தமூர்த்தி, ‘அனைத்து மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.  அவசியம் அனைவராலும் வாசிக்கபட வேண்டிய புத்தகம். நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நிச்சயம் உணரச் செய்யும்.

கன்னட மூலம் : பி.வி.பாரதி
தமிழில் : கே. நல்லதம்பி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

மூங்கில், நண்டு, வாழை, மனிதன்!

3
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன்   இந்த வாரம் மீண்டும் சென்னை விஜயம். காலை நடையில் தி.நகர் ‘ஹாட் சிப்ஸ்’ல் காஃபி சாப்பிடும்போது  விஜயதசமி முடிந்து வாழை தோரணங்கள் வாடி வதங்கி அதன் அடிப் பகுதியில் தண்டு சின்னதாக...

‘அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’

1
lll ஒரு கலைஞனின் பயணம் முடிந்தது - வினோத்   தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நெடுமுடி வேணு, அண்மையில் கொரோனா கொடூரத்துக்குப் பலியானார். கலகலப்பான சுபாவம் கொண்டவரான வேணு, தமது எளிமையான...

ஆரம்பமே அசத்தல்!

0
உங்கள் குரல் சர்வதேச சந்தையின் நிலைக்கேற்ப நம் நாட்டின் எரிபொருட்களின் நிலையை மாற்றி அமைக்கும் முறை குழித்தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது என்று சாடிய "பிரதமரே கருணைக் காட்டுங்கள்" கல்கியின் தலையங்கம்,  எதிர்க்கட்சி நிலையில் இருந்தபோது...

இலுமினாட்டிகள் நிறுவியதா இது?

0
-  முனைவர் அருணன்   அமெரிக்காவின் தெற்கு உட்டாவில் உள்ள பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சிலர் இது கலைப்பொருள் என்றும் , ஒரு சிலர் இது வேற்று...

ஓவர் சென்டிமெண்ட்

இணையத் தளத்தில் வெளியாகியிருக்கும் 'உடன்பிறப்பே' திரைப்படம் - ஒரு பார்வை - ராகவ் குமார் சென்டிமெண்ட் உடன்பிறப்பு : 'பாசமலர்', 'கிழக்குச் சீமையிலே', ’முள்ளும் மலரும்’ போன்ற அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் பட வரிசைகளில் வந்துள்ள...