ஓரடி வைத்தால் நேரடி வருவார் ஷீரடி பாபா

ஓரடி வைத்தால் நேரடி வருவார் ஷீரடி பாபா

ரேவதி பாலு

ஷீரடி ஸ்ரீ சாயிபாபா மஹாசமாதியாகி இது 104 ஆவது வருடம். அதிலும் விசேஷமாக பாபா சமாதி ஆன திதியன்றே (விஜயதசமி) அவரது சமாதி தினமும் (அக்டோபர் 15) வருகிறது. ஷீரடியிலும் மற்றும் உலகமெங்கிலும் உள்ள ஷீரடி பாபா கோயில்களில் இந்த சமாதி தினக் கொண்டாட்டத்திற்கான விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஞானிகளின் கடைக்கண் பார்வையே மலை போன்ற நம் பாவங்களை அழித்து விடுகிறது. இவ்வுலக வாழ்க்கையை நம்பிக்கை, பொறுமை (ச்ரத்தா, சபூரி) என்னும் இரண்டே வார்த்தைகளில் அடக்கி விட்டார் பாபா. மனதை அடக்க முடியாதவர்களிடம், 'உங்கள் மனதிற்குத் தீனியாக சாயியைக் கொடுத்து விடுங்கள்!' என்று நாமஸ்மரணை என்னும் எளிய வழியைக் காட்டினார். பிற உயிர்களிடத்தும் எப்போதும் அன்பாக இருக்கும்படி சொன்னார். ஒரு நாய்க்குப் போட்ட சிறு ரொட்டித் துண்டு, தன் பசியை ஆற்றியதைக் குறிப்பிட்டு, சர்வ ஜீவராசிகளிலும் தான் உறைவதை எல்லோருக்கும் அறிவித்தார். ஒட்டோ உறவோ இல்லாமல் நாய், பூனை போன்ற ஜீவராசிகள் உட்பட, யாரும் யாரிடமும் வருவதில்லை. ஜன்மாந்திர உறவுகளின் தாக்கத்தினால் நம்மை நாடி வருபவர்களை, நம் உற்றாரை, உறவுகளை நாம் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மஹான்கள் எப்போதுமே தாங்கள் சமாதி அடையப்போகும் தருணத்தை பட்டவர்த்தனமாக அறிவிப்பதில்லை. ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவும் தான் சமாதியடையப்போவதைப் பற்றி அப்படித்தான் பூடகமாக ஒரு அறிவிப்பு செய்தார்.

1916-ம் ஆண்டு விஜயதசமியன்று மாலையில் பாபா திடீரென்று கடுங்கோபத்துடன் தன் லங்கோடு, தலைப்பாகை, தான் அணியும் கஃப்னி என்னும் மேலாடை எல்லாவற்றையும் கழற்றி, கிழித்து 'துனி' எனப்படும் அக்னியில் விட்டெறிந்தார். பாபா ஹிந்துவா, முஸ்லிமா என்று சதா சர்ச்சையிட்டுக் கொண்டிருந்த ஷீரடி மக்கள் முன் முழு நிர்வாணத்துடன் நின்று, "ஜனங்களே! இப்போது என்னை நன்றாகப் பார்த்து நான் முஸ்லிமா அல்லது ஹிந்துவா என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்!" என்றார் உரத்தக் குரலில். மக்கள் பயந்து போய் ஒதுங்கி நின்றபோது பாகோஜி ஷிண்டே என்கிற அடியவர் மட்டும் பாபாவின் அருகில் தைரியமாகச் சென்று அவருக்கு லங்கோட்டைக் கட்டிவிட்டு, "பாபா ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? இன்றைக்கு சீமொல்லங்கன் ஆயிற்றே?" என்றார். சீமொல்லங்கன் என்றால் கிராம எல்லையைத் தாண்டுதல் என்று பொருள். விஜயதசமி போன்ற விசேஷ தினங்களில் ஷீரடியில், 'எல்லை தாண்டும்' நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அன்று கிராம எல்லையிலிருந்து கிராம மக்கள் கிராமத்திற்குள் செல்வார்கள். உடனே பாபா, "இது என்னுடைய சீமொல்லங்கன்!" என்றார். அன்றே சூசகமாக, 'எல்லையைத் தாண்டுதல்' என்ற பெயரில் தான் விஜயதசமியன்று சமாதியடையப் போவதைப் பற்றி ஒரு குறிப்பு கொடுத்து விட்டார் பாபா. ஆனால், யாரும் அதைப் புரிந்து கொள்ளவில்லை.

அதன் பிறகும் ஒரு குறிப்பு கொடுத்தார் பாபா. ராமச்சந்திர பாட்டீல் என்கிற அடியவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. 'தான் எந்த நிமிடமும் மரணமடைந்து விடுவோம்' என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோது, பாபா திடீரென்று அவர் முன் தோன்றி, "கவலைப்படாதே! உன் மரண ஓலை வாபஸ் பெறப்பட்டு விட்டது. நீ பிழைத்துக் கொண்டாய்! ஆனால், தாத்யா பாட்டீலைப் பற்றித்தான் என் கவலையெல்லாம். ஏனென்றால், 1918ஆம் ஆண்டு விஜயதசமியன்று அவனுடைய மரணம் உறுதியாகி விட்டது. இதை யாரிடமும், முக்கியமாக தாத்யாவிடம் சொல்லிவிடாதே. அவன் பயத்தில் உறைந்து போய்விடுவான்" என்றார். ராமச்சந்திர பாட்டீல் விரைவில் குணமடைந்து விட்டபோதிலும், தாத்யா பாட்டீலை நினைத்து கவலையுற்றார். இந்த ரகசியத்தை
பாலா ஷிம்பி என்கிற தையல்காரரிடம் மட்டும் பகிர்ந்து கொண்டார். பாபாவின் வார்த்தைகள் சத்தியமானவை என்பதால், இருவரும் தாத்யாவின் நிலையை நினைத்து பயந்து நடுங்கினார்கள். விஜயதசமி வரப்போகிறது. அதற்கு முன்பே தாத்யா காய்ச்சலில் படுத்த படுக்கையானார். அதே நேரத்தில் பாபாவும் காய்ச்சலில் விழுந்தார். பாபா மிக முன் ஜாக்கிரதையாக தனது கடைசி வினாடிக்கான ஏற்பாடுகளையும் கவனித்தார்.

லட்சுமி பாயி ஷிண்டே ஒரு வசதியான பெண்மணி, பாபாவின் பேரிலுள்ள பக்தியால் இரவும் பகலும் மசூதியில் அவள் வேலை செய்தாள். மாலை நேரங்களில் பாபாவுக்கு தன் கைகளாலேயே உணவு தயாரித்து எடுத்து வந்தாள். தனது கடைசி நிமிடங்களில் பாபா லட்சுமிபாய் ஷிண்டேயின் சேவையை நினைவு கூர்ந்தார். தனது பூத உடலை துறப்பதற்கு முன் தமது கைகளை கஃப்னியின் பாக்கெட்டிலிருந்து ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து அவளுக்கு தானமாகக் கொடுத்தார். (அந்த ரூபாய் நாணயங்கள் இன்றும் ஷீரடியில் லட்சுமிபாய் ஷிண்டேயின் வீட்டில் பக்தர்கள் வழிபடுவதற்காக வைக்கப்பட்டு இருக்கிறது.) இது பாபா தனது கடைசி தருணத்தில் செய்த தர்மமாகவும், கூடவே இதன் மூலம் பாபா அவளுக்கு அடியவர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்பது விதமான நல்ல குணங்களை குறிப்பால் உணர்த்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பற்றற்ற மஹாபுருஷரான பாபா கடைசி தருணத்தில் பாசவலையில் சிக்கி விடாமலிருக்க எல்லா அடியவர்களையும் பகல் உணவுக்காகப் போகச் சொல்லி விட்டார்.

லட்சுமி பாயிக்கு ஒன்பது ரூபாய் கொடுத்த பின் பாபா, "எனக்கு மசூதி சவுகரியமாக இல்லை. பாபு சாஹேப் பூட்டியின் வாதாவுக்கு என்னை எடுத்துச் செல்லுங்கள்! அங்கே நான் நலம் பெற்று விடுவேன்" என்றார். இந்தக் கடைசி வார்த்தைகள் அவர் திருவாயிலிருந்து உதிர்ந்தவுடன் அவர் உயிர் பிரிந்தது. பாபா தரையில் விழவில்லை. தமது படுக்கையிலும் படுத்திருக்கவில்லை. அமைதியாக தமது இருக்கையில் அமர்ந்துகொண்டே பயாஜி கோதேயின் மடியில் படுத்திருந்தவாறே தர்மம் செய்துகொண்டே தமது பூதவுடலை நீத்தார். தாத்யா பிழைத்து விட்டார். பாபா சமாதியாகி விட்டார். ஒரு பரிவர்த்தனை நடந்ததாக ஜனங்கள் நம்பினார்கள். 'தாத்யாவுக்காக பாபா தன் உயிரைக் கொடுத்து விட்டார்' என்றார்கள். ஆனால், தாத்யாவின் பெயரைப் போட்டு பாபா தன் முடிவைப் பற்றி தான் குறிப்பு கொடுத்திருக்கிறார் என்பதை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லை. 103 ஆண்டுகளுக்கு முன்பு 1918 அக்டோபர் 15-ம் நாள் விஜயசதமி தினத்தன்று மஹான் ஷீரடி ஸ்ரீ சாயிபாபா மஹா சமாதியடைந்தார். "பாபா தாங்கள் இல்லையென்றால் நாங்கள் என்ன செய்வோம்?" என்று ஒருமுறை அடியவர்கள் கவலையாக வினவியபோது, பாபா கூறிய அமுத மொழிகள், "கவலையே படாதீர்கள்! நான் என் கல்லறையிலிருந்தும் உங்களுடன் பேசுவேன். என் எலும்புகளும் உங்களுடன் பேசி, உங்கள் நலம் விசாரிக்கும்."

உடலை விட்டு விட்டாலும் பாபா இப்போதும் வாழ்கிறார். ஏனெனில், 'பிறப்பு, இறப்பு' என்கிற இரண்டையும் கடந்தவர் அவர். எவனொருவன் அவரை முழு மனதுடன் நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பாபாவைப் போன்ற மகான்கள் மனித உருவில் இவ்வுலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு நன்மை புரிய வந்தவர்கள். அவர்களுக்கு இறப்பேயில்லை. பூத உடலில் வாழ்ந்தபோது, என்னென்ன அனுபவங்களை பக்தர்களுக்கு அளித்தாரோ, அதே அனுபவங்களை மஹா சமாதியான பின்னரும் அளித்து வருகிறார்.

அருளை வாரி வாரி வழங்கும் கருணை வள்ளல்களான மகான்களிடம் நாம் பட்ட அருட் கடனை இப்பிறவியிலும், இனிவரும் பிறவிகளிலும் சத்தியமாக ஒருபோதும் நம்மால் திருப்பிக் கொடுக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம். அப்பேர்ப்பட்ட மகான்
ஸ்ரீ பாபா என்ன சொல்கிறார் தெரியுமா? 'என் பக்தர்களின் வருகைக்காக நான் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.' ஒரு மகானை தரிசிக்க நினைக்கும் பக்தன் மட்டும் அவர் தரிசனத்திற்காக ஏங்கவில்லை. மகான்களும் பக்தர்களின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்' என்னும் பேருண்மை இதிலிருந்து நமக்குப் புலப்படுகிறது. அவரை நோக்கி ஓரடி வைத்தால் நம்மை நோக்கி நேரடியாக வர ஷீரடி

ஸ்ரீ சாயிபாபா காத்திருக்கிறார் என்னும் நினைப்பே நம்மைப் புல்லரிக்க வைக்கிறது.

'எங்களது அஹங்காரத்தை அழித்து, அதன் விளைவால் ஏற்படும் வாத விவாத குணங்களை முற்றிலுமாக அழித்து விடுங்கள். எங்களது மனச்சலனங்களை அடக்கி அமைதி, சாந்தம் இவற்றை எங்களுக்கு அருளுங்கள். தங்கள் அன்பான அரவணைப்பால் எங்கள் அறியாமை இருள் விலகி, மகிழ்ச்சியான வாழ்வு வாழ ஆசிர்வதியுங்கள்!' என்னும் பிரார்த்தனையுடனேயே இந்த மஹாசமாதி தினத்தன்று எல்லோரும் அவரைப் பணிந்து வணங்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com