
– ஹர்ஷா
"நீங்கள் சொன்ன சிறிய ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வந்து விட்டோம். நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?"
"நான் அங்கில்லை… ஆனால் உங்களுக்குத் தேவையான கோக்கோ – சாண்ட்விச்சுக்குள் கடைசி மேஜையில் இருக்கிறது, போய் எடுத்துக்கொள்ளுங்கள்" என்றது மறுமுனையிலிருந்து போனில் பேசிய குரல்.
சாண்ட்விச்சுக்குள் மறைக்கப்பட்ட ஒரு சின்ன எஸ்டி மெமரி கார்டை எடுத்துத் தங்கள் கருவியில் பொருத்திப் பார்த்தபின், அவர் மீண்டும் போனில் பேசியவரை அழைக்கிறார்.
"சிப்கார்ட் திறக்க பாஸ்வேர்ட் கேட்கிறதே?" என்கிறார்.
கிரிப்டோ கரன்சியாக (கொடுப்பவரையும் பெறுபவரையும் அறிந்து கொள்ளமுடியாத கண்ணால் பார்க்க முடியாத பிட் காயின் என்று சொல்லப்படும் டிஜிட்டல் மணி) 1 லட்சம் டாலர்கள் சொன்ன கணக்குக்கு அனுப்புங்கள். பாஸ்வேர்ட் வரும் என்கிறது அந்தக் குரல்.
"முதலில் பேசிய பணத்தைவிட இது அதிகம்"
"ஆம்… அவசியமானால் வாங்கிக்கொள்ளுங்கள்" என்கிறது குரல்.
சில நிமிடங்களில் கிரிப்டோ கரன்சி கணக்கில் மாறுகிறது. பாஸ்வேர்ட் சொல்லப்படுகிறது.
மறுநாள் –
நீங்கள் அனுப்பிய கார்ட்டில் முழுத் தகவலும் இல்லையே. மேல் விபரங்கள் அறிய வேண்டும்.
"அதற்கு நீங்கள் மேலும் 50000 டாலர்களைக் கிரிட்டோவாக அனுப்புங்கள்."
"இது நேர்மையில்லை."
"நமது தொழில் செய்வது எல்லாமே நேர்மைதான்" என்கிறது மர்ம குரல்.
மறுநாள் பணம் கணக்கு மாற்றப்பட்ட பின்னர்,
"எங்கே வரவேண்டும்?"
நகரின் வெளியே பெட்ரோல் பங்கிலிருக்கும் கடையில் xx பிராண்டட் சூயிங்கம் பாக்கெட் கேளுங்கள், அதன் உள்ளே சிப் இருக்கிறது, எடுத்துக்கொள்ளலாம்.
இடத்தை அங்குச் சென்றபின் உறுதி செய்து கொண்டவர்கள் வேண்டுமென்றே அடையாளம் சொல்லப்பட்ட கடையைத் தவிர்த்து மற்றொரு கடைக்குச் செல்லுகிறார்கள்.
'நீங்கள் போகவேண்டியது அந்தக் கடையில்லை, அதன் எதிரே இருப்பது' என்கிறது குரல். சில நிமிடங்களில் அருகில் நிற்கும் காரிலிருக்கும் தம்பதியை வளைத்துப் பிடிக்கிறது அமெரிக்க எஃ.பி.ஐ.
ஒரு துப்பறியும் படத்தின் காட்சி போலத் தோன்றும் இது உண்மையில் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்தது.
கடந்த ஆண்டு வெளிநாட்டு அரசு ஒன்றுக்குத் தடை செய்யப்பட்ட தரவுகள் மற்றும் ஒரு செய்தி அடங்கிய ஒரு தொகுப்பை அனுப்பியதாக மேற்கு வர்ஜீனிய நீதித்துறை குறிப்பிடுகிறது. 'ரகசியமான உறவை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான அந்தத் தகவல் தொடர்பு மூலம் கூடுதலாக ரகசியங்களைத் தரவும் அவர் தயாராக இருந்திருக்கிறார், அவரைக் கண்டுபிடியுங்கள்' என்று எஃ.பி.ஐ.க்கு வர்ஜீனிய நீதித்துறை ஒரு குறிப்பை அனுப்புகிறது. அமெரிக்காவில் நீதித்துறையின் பணிகளில் ஒன்று சந்தேகப்படுபவர்கள் மீது ஆய்வு செய்யப் போலீசுக்குக் கட்டளையிடுவது. அவர்கள் துப்பறிந்து கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்வார்கள்.
அந்த மனிதரைப் பொறி வைத்துக் கண்டுபிடிக்க எஃ.பி.ஐ. போட்ட நாடகத்தின் ஒரு பகுதிதான் மேலே சொல்லப்பட்டிருப்பது.
'தான் பேரம் பேசி வெற்றிகரமாக டீலை முடித்துவிட்டோம்' என்று மகிழ்ந்தவருக்கு அதிர்ச்சித் தந்தது, தான் பேசிக்கொண்டிருந்தது அந்நிய நாட்டின் ஏஜென்ட் இல்லை, எஃபி.ஐ.யிலிருந்து அவரை ஆதாரங்களுடன் பிடிக்க இயங்கிக்கொண்டிருக்கும் டீம் என்பது.
அவரைவிட அதிர்ச்சி அடைந்தவர்கள் எஃ.பி.ஐ. டீம். காரணம், செயலில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கக் கடற்படை அணுசக்திப் பொறியாளர் ஜோனாதன் டேபே மற்றும் அவரது மனைவி டயானா.
இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநில நீதித்துறை, அவர்களின் படங்களை ஊடகங்கள் வெளியிடுவதைத் தடை செய்திருக்கிறது.