தீபம்’ – இல்லத்தின் அருள் வெளிச்சம் – 2011

தீபம்’ – இல்லத்தின் அருள் வெளிச்சம் – 2011

'கல்கி' குழுமத்திலிருந்து வெளியிடப்படும், 'தீபம்' ஆன்மிக இதழுக்கு ஒரு தனிப் பெருமை உண்டு.

'நா.பா.' என்று எல்லோராலும் அழைக்கப்படும் நா.பார்த்தசாரதி அவர்கள் ஆரம்ப காலத்தில் நமது, 'கல்கி' குழுமத்தில் பணிபுரிந்தவர் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பசுமலை பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பண்டித வித்துவானான இவரை, 'கல்கி' இதழின் உதவி ஆசிரியராகப் பணி அமர்த்தினார், 'கல்கி' நிறுவன அதிபர் திரு.சதாசிவம் அவர்கள்.

நா.பா. அவர்களைப் பொறுப்பாசிரியராக வைத்து முற்றிலும் இலக்கிய விஷயங்களைக் கொண்ட ஒரு தனி மாத இதழைத் தொடங்கலாம் என்றும், அதற்கு, 'தீபம்' என பெயர் சூட்டலாம் என்றும் திட்டமிட்டிருந்தாராம் திரு.சதாசிவம்.

சில காலங்களில் தவிர்க்க முடியாத சில சூழல்களின் காரணமாக நா.பா. அவர்கள் கல்கி இதழிலிருந்து விலகவேண்டியதாயிற்று. விலகிய உடனேயே, திரு.சதாசிவம் அவர்கள் முடிவு செய்துவைத்திருந்த, 'தீபம்' எனும் பெயரிலேயே ஒரு இலக்கிய இதழை 1965ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தொடங்கினார் நா.பா. அதை உலகுக்குத் தெரியப்படுத்தும் அரைப்பக்க விளம்பர செய்தி கூட, 'கல்கி' இதழிலேயே வெளியானது குறிப்பிடத்தக்கது.

'தீபம்' என்கிற பெயர் திரு.சதாசிவம் அவர்களுக்கு மனதில் தோன்றுவானேன்? அதற்கும் ஒரு சுவையான பின்னணி இருந்திருக்கலாம். 1952 'கல்கி' தீபாவளி மலரில், 'புன்னை வனத்துப் புலி' என்று ஒரு கதையை எழுதினார் அமரர் கல்கி அவர்கள். அதன் நாயகன் சந்திரசூடன். அவன், புன்னை வனம் தபால் நிலையத்துக்குப் போய், தனக்குத் தபாலில் வந்திருந்த, 'சஞ்சிகை'யை (பத்திரிகையைத்தான்) வாங்குகிறான். அதே பத்திரிகையைப் பார்க்க வேண்டும் என்று பரபரக்கிறாள் நாயகி மனோன்மணி. பாதிக் கதையை வெளியிட்டு, மீதிக் கதையை வாசகர்களை எழுதச் சொல்லி நூறு ரூபாய் பரிசு தருகிற போட்டியில் அவள் கலந்துகொள்கிறாள். அந்தப் பத்திரிகையின் பெயர், 'தீபம்.' இந்த பெயர் அப்போதே, திரு.சதாசிவம் அவர்களின் மனதில் விதையாக விழுந்திருக்கலாம்.

ஆக, 'தீபம்' என்ற பெயர் பிறந்தது 1952ஆம் ஆண்டு, 'கல்கி' பத்திரிகையில்தான். அது, 2011ஆம் ஆண்டு மீண்டும் பிறந்த வீட்டுக்கே வந்திருப்பது ஒரு வெற்றிகரமான இலக்கியப் பயணம்தானே.

அந்த இலக்கியப் பயணத்தில் ஆன்மிகத்தையும் கலந்து, இலக்கியத்தோடு கூடிய ஆன்மிக இதழாய் பொறுப்பாசிரியர் கல்பனாவின் மேற்பார்வையில், தனது ஒன்பதாம் ஆண்டில் (2020) வெற்றிநடை போட்டு வருகிறது நமது 'தீபம்' இதழ். இலக்கியம், ஆன்மிகம் கடந்து மனிதநேயம், நல்லொழுக்கம், சரியான வாழ்க்கை முறை, யோகம், தவம் என மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து நல்ல விஷயங்களையும் போதிக்கும் ஒரு விருட்சமாக விளங்கி வருகிறது, 'தீபம்' இதழ். தொலைக்காட்சி, அலைபேசி என மக்களின் கவனத்தை ஈர்க்கும் பல்வேறு ஊடகங்களின் ஆதிக்கம் மிகுந்திருக்கும் இக்காலகட்டத்திலும், 'தீபம்' இதழுக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருப்பது, 'கல்கி' குழுமத்தின் மீதும், 'தீபம்' இதழ் மீதும் வாசகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குச் சான்று.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com